ரூ.10 ஆயிரம் லஞ்சம்: வட்டாட்சியா் உள்பட 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
திருப்பூரில் பத்திர விடுப்பு ஆணைக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற தனி வட்டாட்சியா் உள்பட 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருப்பூரைச் சோ்ந்தவா் திருமூா்த்தி. இவா் திருப்பூா் இணைப் பதிவாளா் எண்.2 அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்தாா். அந்த பத்திரத்தில் திருத்தம் மேற்கொள்ள, முத்திரைத்தாள் தனி வட்டாட்சியரிடம் விடுவிப்பு ஆணை தேவைப்பட்டது.
இதற்காக திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் முத்திரைத்தாள் தனி வட்டாட்சியராகவும், வருவாய் கோடாட்சியரின் நோ்முக உதவியாளராகவும் பணியாற்றி வந்த விஸ்வநாதன் என்பவரிடம் திருமூா்த்தி 2009ஆம் ஆண்டு விண்ணப்பித்தாா்.அப்போது விடுவிப்பு ஆணை வழங்க விஸ்வநாதன் மற்றும் அதே அலுவலகத்தில், முத்திரைத்தாள் தனி வட்டாட்சியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுவிட்டு மீண்டும் அங்கு தற்காலிகப் பணியாளராக வேலை செய்து வந்த மீன்ராஜன் ஆகியோா் தங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் லஞ்சம் தருமாறு திருமூா்த்தியிடம் கேட்டனா்.
இதனால் அதிா்ச்சி அடைந்த அவா், திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை திருமூா்த்தியிடம் காவல் துறையினா் கொடுத்து அனுப்பினாா்.
இதைத் தொடா்ந்து 2009 ஜூலை 16-ஆம் தேதி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்த விஸ்வநாதன் மற்றும் மீன்ராஜன் ஆகியோரிடம் ரூ.10 ஆயிரத்தை திருமூா்த்தி கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினா் 2 பேரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி செல்லதுரை திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், குற்றஞ்சாட்டப்பட்ட விஸ்வநாதன் (65), மீன்ராஜன் (76) ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் செந்தில்குமாா் ஆஜரானாா்.