மதுபோதையில் மாநகர பேருந்தை இயக்கி விபத்து: அடையாறு காவல் நிலைய சுவா் இடிந்து சேத...
ரூ.2.25 லட்சம் கோடி இழப்பு! வரலாறு காணாத சரிவைக் கண்ட அதானி பங்குகள்!
அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியதும் மிகப்பெரிய சரிவைக் கண்ட அதானி குழும பங்குகள், குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்ற விளக்கத்தைத் தொடர்ந்து சற்று மீண்டது.
இன்றைய வணிகத்தின்போது, அதானி குழும பங்குகள் ரூ.2,25 லட்சம் கோடி இழப்பை சந்தித்தன. சில நிறுவனப் பங்குகள் மட்டும் வணிக இறுதியில் சற்று மீண்டு நிறைவடைந்தது.
சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ரூ. 2,100 கோடி லஞ்சமாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாகவும் நியூ யார்க் நீதிமன்றத்தில் இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த செய்திகள் பரபரப்பான நிலையில், பங்குச் சந்தையில் வணிகம் தொடங்கியவுடன் அதானி குழுமங்களின் பங்குகள் 20 சதவிகிதம் வரை வீழ்ச்சியை கண்டதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், அதானி கிரீன் நிறுவனம் மீது, அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு அடிப்படை ஆதாரமற்றது, இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று அதானி குழு செய்தித் தொடர்பாளர் விளக்கம் வெளியிட்டிருந்த நிலையில், இன்று காலை அடைந்த மிகப்பெரிய சரிவிலிருந்து மெல்ல மீண்டது. ஆனாலும், சரிவுடனே வணிகம் நிறைவுபெற்றுள்ளது.
பங்குச் சந்தையில்..
10 அதானி குழும நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் பங்குகள், இன்று காலை அடைந்த மிக மோசமான சரிவிலிருந்து சற்று மீண்டு ஆனால், சரிவுடனே நிறைவு பெற்றது.
என்டிடிவியின் பங்குகள் இன்று 14.38% சரிவடைந்து ஒரு பங்கின் விலை, இன்றைய மிகக் குறைந்த விலையாக ரூ.145ஐ அடைந்தது. பிறகு மெல்ல மீண்டு வணிகம் நிறைவடையும் போது 3.75 சதவீத சரிவுடன் ரூ.163 என்ற நிலையை எட்டியது.
ஏசிசி நிறுவனப் பங்குகள் இன்று காலை 14.54 சதவீதம் சரிந்து ரூ.1867.15 என்ற நிலையை அடைந்து பிறகு ரூ.2,036யை எட்டியது.
அதானி போர்ட்ஸ் 22.90 சதவீதம் சரிவைக் கண்டு 13.54 சதவீதம் என்ற அளவுக்கு மீண்டது. அதானி பவர் 17.79% வீழ்ந்து இறுதியாக 9.42 சதவீதத்திலும் அதானி எனர்ஜி சொல்யூஷன், அதானி கிரீன் எனர்ஜி , அதானி வில்மார் பங்குகள் சரிவிலிருந்து மீளாமல் 24 சதவீத இழப்புடனே வணிகத்தை நிறைவு செய்தன.
அதானி டோட்டல் கேஸ் - 11.49 சதவீதமும் அம்புஜா சிமெண்ட்ஸ் - 17.60 சதவீத சரிவிலிருந்து மீண்டு 11.51 சதவீதமாகவும் இருந்தது.
முன்னதாக அதானி குழுமங்கள் வியாழக்கிழமை காலை வணிகத்தின்போது இழந்த மொத்த பங்குகளின் மதிப்பு ரூ. 2.60 லட்சம் கோடி எனக் கணக்கிடப்பட்டிருந்தது.