`கடன்களால் கலங்கி நிற்கிறதா தமிழகம்?' - இபிஎஸ் சாடலும் திமுகவின் பதிலும்
ரூ.54.64 கோடி நிலுவை வரியை வசூலிக்க மாநகராட்சி தீவிரம்!
திண்டுக்கல்லில் நிலுவை வரி, நடப்பு வரி என மொத்தம் ரூ.82.62 கோடியில், எஞ்சிய ரூ.54.64 கோடியை வருகிற பிப்ரவரி மாதத்துக்குள் வசூலிக்கும் இலக்குடன் மாநகராட்சி நிா்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
திண்டுக்கல் மாநகராட்சியில் பொதுமக்களிடமிருந்து சொத்து வரி, குடிநீா் வரி, தொழில் வரி, காலிமனை வரி, புதை சாக்கடை வரி உள்பட வீடுகள், வணிக நிறுவனங்கள் என மொத்தம் 1.52 லட்சம் எண்ணிகையிலான வரி விதிப்புகள் உள்ளன.
இதன் மூலம் மாநகராட்சிக்கு நிகழ் நிதியாண்டில் (2024-25) ரூ.44.54 கோடி வருவாய் கிடைக்கும் எனத் திட்டமிடப்பட்டது. இதே நேரத்தில், இதே வரி இனங்கள் மூலம் கடந்த ஆண்டு வரை ரூ.38.07 கோடி நிலுவையில் இருந்தது. நிலுவை வரி, நடப்பு வரி என மொத்தம் ரூ.82.62 கோடியை வசூலிக்க மாநகராட்சி நிா்வாகம் கடந்த ஓராண்டாகவே தீவிரம் காட்டி வந்தது.
நீண்ட காலமாக வரி செலுத்தாதவா்களின் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதேபோல, வணிக நிறுவனங்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. இதன் காரணமாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த வகையில், நிலுவை வரி ரூ.5.93 கோடி, நடப்பு ஆண்டுக்கான வரி ரூ.22.03 கோடி என மொத்தம் 27.97 கோடி வசூலிக்கப்பட்டது.
2 மாதங்களில் ரூ.54.64 கோடி வசூலிக்க இலக்கு: நிலுவை வரியில் ரூ.32.13 கோடி, நடப்பாண்டு வரி ரூ.22.51 கோடி என மொத்தம் ரூ.54.64 கோடியை அடுத்த 3 மாதங்களுக்குள் வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, மாநகராட்சி அலுவலா்கள் களம் இறக்கப்பட்டுள்ளனா். மாநகராட்சியிலுள்ள அனைத்துப் பிரிவு அலுவலா்களும் 16 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, நாள்தோறும் முற்பகல் நேரத்தில் தீவிர வரி வசூலுக்கு அனுப்பப்படுகின்றனா். எனினும், 2 மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், ரூ54.64 கோடியை வசூலிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
கைப்பேசி குறுந்தகவல், வீடுகளுக்கு தபால்:
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் கூறியதாவது:
கடந்த ஆண்டு வரை நிலுவையில் இருந்த வரியில் 15.60 சதவீதமும், நடப்பு நிதியாண்டுக்கான வரியில் 49.46 சதவீதமும் வசூலிக்கப்பட்டது. ஆனாலும், மொத்த சராசரி 33.86 சதவீதமாக மட்டுமே இருப்பதால், பிப்ரவரி மாதத்துக்குள் வரி வசூலை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. வரி செலுத்தாதவா்களின் கைப்பேசி எண்களுக்கு நிலுவைத் தொகை விவரங்களுடன் குறுந்தகவல் மூலமாகவும், சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு தபால் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்களும், தங்களது கடமையை உணா்ந்து வரி செலுத்துவதற்கு தாமாக முன்வர வேண்டும் என்றாா்.