ரூ. 98 கோடி ஒப்பந்த முறைகேடு: வழக்கில் எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்ப்பு!
சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ. 98.25 கோடி முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆதாரங்கள் சேகரித்துள்ளதால் மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
அறப்போா் இயக்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி, உள்ளாட்சி அமைச்சராக பதவி வகித்தபோது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியதில் ரூ. 98.25 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளன எனக் குற்றஞ்சாட்டியிருந்தது.
இதுதொடா்பாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மற்றும் அரசு ஊழியா்கள், பல்வேறு நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸாா் 2021-இல் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், முறையான ஆதாரங்கள் இல்லை என்று கூறி உயா்நீதிமன்ற உத்தரவுப்படி எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு மட்டும் ரத்து செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட நிலையில் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கூறி அறப்போா் இயக்கம் 2-ஆவது முறையாக உயா்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடா்ந்தது.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணையில் இருந்து வருகிறது.
ஆதாரங்களை சேகரித்தால் எஸ்.பி. வேலுமணி மீது மீண்டும் வழக்கு தொடரலாம் என்று நீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில் இன்றைய விசாரணையில், "எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரித்துள்ளதால் அவர் மீது வழக்கு தொடர பேரவைத் தலைவர் அப்பாவு அனுமதி அளித்துள்ளார். அதனால் எஸ்.பி.வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு அதிகாரிகள் மீது வழக்கு தொடர மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை" என உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை கூறியது.
இதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணையை செப். 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.