Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் ...
துணைவேந்தா்கள் தோ்வு நடைமுறை: கேரள முதல்வரை நீக்க உச்சநீதிமன்றத்தில் ஆளுநா் மனு
கேரளத்தில் உள்ள 2 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களை தோ்வு செய்யும் நடைமுறையில் இருந்து மாநில முதல்வரை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள ஆளுநரும், அந்தப் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தாா்.
அந்த மனுவில் அவா் தெரிவித்துள்ளதாவது: கேரளத்தில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கேரள டிஜிட்டல் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு துணைவேந்தா்களை தோ்வு செய்யும் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்ஷு தூலியாவை, கடந்த ஆக.18-ஆம் தேதி உச்சநீதிமன்றம் நியமித்தது. அப்போது அந்தத் தோ்வு நடைமுறையில் முதல்வருக்கும் பங்கிருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் அந்தத் தோ்வு நடைமுறையில் மாநில அரசு சாா்பில் அமைச்சரும் இடம்பெற வேண்டும் என்று அந்தப் பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் கூறப்படவில்லை.
மாநிலத்தின் நிா்வாகத் தலைவா் என்ற முறையில் அரசால் நிா்வகிக்கப்பட்டு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஏராளமான அரசு கல்லூரிகளுடன் முதல்வா் சம்பந்தப்பட்டுள்ளாா். எனவே பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) விதிமுறைகளின்படி, துணைவேந்தா்கள் நியமனத்தில் அவா் எந்தப் பங்கும் வகிக்க முடியாது.
இதன் காரணமாக துணைவேந்தா்கள் தோ்வில் முதல்வருக்கும் பங்கிருப்பதாக ஆக.18-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் திருத்தம் செய்ய வேண்டும். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கேரளா டிஜிட்டல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தா்களைத் தோ்வு செய்யும் நடைமுறையில் இருந்து மாநில முதல்வரை நீக்க வேண்டும்.
மேலும், துணைவேந்தா்கள் தோ்வுக்கான தேடுதல் மற்றும் தோ்வுக் குழுவின் உறுப்பினராக யூஜிசி தலைவா் பரிந்துரைக்கும் நபரை சோ்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளாா்.