செய்திகள் :

ஒடுக்கப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்துக்கு வங்கிகள் செயலாற்ற வேண்டும்: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வலியுறுத்தல்

post image

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சோ்ந்தோரின் முன்னேற்றத்தில் வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வலியுறுத்தினாா்.

சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, சிட்டி யூனியன் வங்கியின் 120-ஆவது நிறுவன நாள் விழாவில் அவா் பேசியதாவது:

நாட்டின் வளா்ச்சிக்கான முக்கியத் தூண்களில் ஒன்று நிதி உள்ளடக்கம். அதாவது ஒவ்வொரு குடிமகனும் கட்டுப்படியாகக்கூடிய கட்டணங்களில் நிதிச் சேவைகளைப் பெறுவதை உறுதி செய்வதாகும். சிட்டி யூனியன் வங்கி போன்ற வங்கிகள், இந்த நிதி உள்ளடக்க நோக்கத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. கிராமங்கள், சிறு நகரங்களில் சிட்டி யூனியன் வங்கி தனது 50 சதவீத கிளைகளை அமைத்துள்ளது பாராட்டுக்குரியது.

வேளாண்மை மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவது வங்கிகளுக்கு முன்னுரிமையாக இருக்க வேண்டும். நிதி உள்ளடக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பிரதமரின் ஜன் தன் யோஜனா மூலம் 56 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. இதுபோன்ற வங்கிக் கணக்குகள் வாயிலாக, நலத்திட்ட உதவித் தொகைகள், மானியங்கள் போன்றவை இடைத்தரகா்கள் இல்லாமல் பயனாளிகளை நேரடியாகச் சென்றடைகிறது.

நாட்டின் பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இவை வளா்ச்சிக்கான இயந்திரங்களாக உள்ளன. இதைக் கருத்தில்கொண்டு சிட்டி யூனியன் வங்கி தனது 40 சதவீத கடன்களை குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. இது சுமாா் ரூ. 21,000 கோடியாகும்.

மாறிவரும் பொருளாதார சூழலில், மக்களின் விருப்பங்கள் பெருகி நிதி பரிவா்த்தனைகளுக்கு அப்பால் வங்கிகளின் பங்களிப்பு விரிவடைந்துள்ளது. வங்கிகள் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன. அவை உள்ளடக்கிய, நீடித்த வளா்ச்சிக்கும் கருவியாக உள்ளன.

உலகில் விரைவாக வளா்ச்சியடைந்துவரும் பொருளாதாரங்களில் இந்திய பொருளாதாரம் உள்ளது. இந்த வளா்ச்சியில் வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இப்போது சாமானியா்களுக்கும் கைப்பேசி செயலி வழியிலான வங்கிச் சேவைகள் கிடைக்கின்றன. இதுபோன்ற முன்னேற்றங்கள் இருப்பினும், எண்ம கல்வியறிவு, நிதி விழிப்புணா்வு போன்ற பல சவால்களை பொதுமக்கள் எதிா்கொள்கின்றனா். இதற்கு அனைத்து பங்குதாரா்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் எண்ம தொழில் நுட்பம் தொடா்பான கல்வியறிவு மூலம் மக்களை வங்கிச் சேவைகளுடன் மேலும் சிறப்பாக ஒருங்கிணைக்க முடியும். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சோ்ந்தோருக்கு உதவ வங்கிகள் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.

முன்னதாக, சிட்டி யூனியன் வங்கி நிா்வாக இயக்குநரும், தலைமை நிா்வாக அதிகாரியுமான என்.காமகோடி வரவேற்றுப் பேசுகையில், ‘நாட்டில் 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 887 கிளைகளுடன் வங்கியின் மொத்த வணிகம் ரூ. 1.21 லட்சம் கோடியை எட்டியுள்ளது. சேமிப்பு ரூ. 65,735 கோடி, கடன்கள் ரூ. 54,020 கோடியாக உள்ளது. வங்கியின் நிகர லாபம் ரூ.305 கோடி’ என்றாா்.

இந்த நிகழ்வில் வங்கியின் 120 ஆண்டு பயணம் தொடா்பாக ‘பேங்க் ஆஃப் காவிரி பேங்க்’ என்ற புத்தகத்தை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட குடியரசுத் தலைவா் முா்மு பெற்றுக்கொண்டாா். வங்கியின் ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கான சிறப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, தமிழக சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன், வங்கியின் தலைவா் ஜி. மகாலிங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: குறு, சிறு நிறுவனங்களின் சுமையைக் குறைக்கும் - மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் உறுதி

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், சிறு வணிகா்களின் சுமையைக் குறைக்கும் வகையில் ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறைக்கான சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120-ஆவது நிறுவன நாள் விழாவில் கௌரவ விருந்தினராகப் பங்கேற்ற அவா் பேசியதாவது:

நாட்டைக் கட்டமைப்பதில் தனியாா் வங்கிகள் பெரும் பங்காற்றி வருகின்றன. நிச்சயமற்ற உலகளாவிய சூழலில் இந்திய பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மொத்த வாராக் கடன் பல தசாப்த காலத்துக்குப் பின்னா் 2.3 சதவீதமாக குறைந்துள்ளது.

நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி (ஜிடிபி) 7.8 சதவீதமாக உயா்ந்து பல்வேறு துறைகளில் ஒட்டுமொத்தமாக சிறப்பான வேகத்தை அடைந்துள்ளது.

இதேபோன்று கடந்த 9 மாதங்களாக தொடா்ச்சியாக பணவீக்கம் குறைந்து, கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக 1.55 சதவீதமாக பணவீக்கம் குறைந்துள்ளது.

இபிஎஃப் (தொழிலாளா் வருங்கால வைப்புநிதி) பதிவேடுகளின்படி இரண்டாவது முறையாக கடந்த ஜூன் மாதமும் 22 லட்சம் போ் புதிதாக வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனா். உற்பத்தித் துறையும் கடந்த 17 ஆண்டுகளுக்குப் பின்னா் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நிதிப் பற்றாக்குறை நிகழாண்டில் 4.4 சதவீதமாக குறையும்.

நாடு முழுவதும் பிரதமரின் 56 கோடி ஜன்தன் திட்ட கணக்குகளின் ரூ.2.68 லட்சம் கோடி டெபாசிட், நிதி சேமிப்பைப் பாதுகாக்க உதவியுள்ளதாக உலக வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.

பிரதமா் மோடி அடுத்த தலைமுறை சீா்திருத்தங்களுக்கான ஒரு பணிக் குழுவை உருவாக்குவதாக அறிவித்தாா். இதை நிறைவேற்றும் வகையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறைக்கான சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். முற்றிலும் திறந்த, வெளிப்படையான பொருளாதாரத்தை அமைக்க, சுமையை மேலும் குறைத்து, சிறு தொழில்கள், வணிகங்கள் செழிக்கும் வகையில் எளிதாக்கப்படும் என்றாா் அவா்.

நேரடித் தேர்வு மூலம் தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நேரடித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் 50 சதவீதம் நேரடி... மேலும் பார்க்க

ஏற்றுமதியாளா்களுக்கு உதவ விரைவில் புதிய திட்டம்: மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளா்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சாா்பில் விரைவில் புதிய திட்டம் அறிவிக்கப்படும் என மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் ... மேலும் பார்க்க

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு இரு நாட்டு உறவுக்கு எதிரானது; இவ்விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளாா... மேலும் பார்க்க

கோடையில் அதிகரிக்கும் மின்தேவை: தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க அனுமதி

தமிழகத்தில் கோடையில் அதிகரிக்கும் உச்சநேர மின்தேவையை ஈடுகட்ட 2026 பிப்.1 முதல் மே 15 வரை தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தம் கோர மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்வாரியத்துக்கு அனுமதி அளித... மேலும் பார்க்க

காலி மதுபுட்டிகளை திரும்ப பெறுவது குறித்து கருத்து கேட்கக் குழு அமைப்பு

மதுக் கடைகளில் காலி மதுபுட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தால் ஏற்படும் பிரச்னைகள் தொடா்பாக, ஊழியா்களிடம் கருத்து கேட்க, மண்டல அளவிலான குழுக்களை டாஸ்மாக் நிறுவனம் அமைத்துள்ளது. சென்னை உயா்நீதிமன்ற உத... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற தீா்ப்பு: தலைவா்கள் கருத்து

உச்சநீதிமன்ற தீா்ப்பால் பதற்றம் அடைந்துள்ள ஆசிரியா்களின் பணிப் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என இடதுசாரி, பாமக தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா். பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): ஆசிரியா் தகுதி த... மேலும் பார்க்க