`Even during my MRI scan, I was vibing to Anirudh’s songs' - Vijay Devarakonda |...
"ரோஹித் தலைமையிலான இந்திய அணி T20 உலகக் கோப்பை, CT 2025 வென்றதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை" - கங்குலி
இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா, அதன் பிறகு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கேப்டனாக அணியை வழிநடத்தினார்.
பிறகு, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கெதிராக டெஸ்ட் தொடரை இழந்தபோது, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் ஓய்வுபெற வேண்டும் என பேச்சுக்கள் எழுந்த இரண்டே மாதங்களில், துபாயில் சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணிக்கு வென்று கொடுத்தார்.

இவ்வாறிருக்க, அடுத்த மாதம் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன்சியிலிருந்து ரோஹித் நீக்கப்படுவார் என்று பேச்சுக்கள் அடிபட்ட அடுத்த சில மணிநேரத்திலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் (மே 7) ரோஹித்.
இவரின் இந்த முடிவால், ஒரு தரப்பினர் பிசிசிஐ-க்கு எதிராகக் கருத்து தெரிவிக்க, இன்னொரு தரப்பினர் ஓய்வு அவரின் தனிப்பட்ட முடிவு என்று கூறிவந்தனர்.
இந்த நிலையில், ரோஹித்தின் ஓய்வு குறித்து தனியார் ஊடகத்திடம் பேசியிருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, "ஓய்வு என்பது எல்லோருடைய தனிப்பட்ட முடிவு. அதுபோல அவர் ஓய்வுபெற இதுவே சரியான நேரம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
இந்தியாவுக்காக அவர் நிறைய விளையாடியிருக்கிறார். அவரின் அடுத்தகட்ட பயணத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் ஒரு நல்ல தலைவராக இருந்தார். அதனால்தான் அவர் இந்தியாவின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
எனவே, அவர் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி பட்டங்களை வென்றதில் எனக்கு ஆச்சர்யமில்லை.
இது அவருக்கு வெற்றிகரமான கரியர். இதை நினைத்து அவர் பெருமைப்பட வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.