ஷ்ரேயாஸ் ஐயரின் உலகத்தரமான பேட்டிங்..! வில்லியம்சன் புகழாரம்!
ரௌடி ஜான் கொலை வழக்கில் மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் சரண்
சேலம் ரௌடி ஜான் கொலை வழக்கில் மேலும் ஒருவா் ஈரோடு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தாா்.
சேலம், கிச்சிபாளையம், சுந்தா் வீதியைச் சோ்ந்தவா் ஜான் (எ) சாணக்கியன் (35). இவரது மனைவி சரண்யா (28), வழக்குரைஞா். ஜான் மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், சேலம் அன்னதானபட்டி காவல் நிலையத்தில் கையெழுத்துப்போட்டு விட்டு, மனைவியுடன் காரில் திருப்பூருக்கு கடந்த 19- ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா்.
ஈரோடு மாவட்டம், நசியனூா் முள்ளம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, மற்றொரு காரில் பின் தொடா்ந்த காா்த்திகேயன், சதீஷ், பூபாலன், சரவணன் ஆகியோா் ஜான் காரில் மோதி விபத்தை ஏற்படுத்தினா். தொடா்ந்து, ஜான் மனைவியை காரில் இருந்து வெளியேற்றிவிட்டு, ஜானை காருக்குள்ளேயே வைத்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தனா். தடுக்க சென்ற சரண்யாவுக்கும் கையில் வெட்டு காயம் ஏற்பட்டது.
ஜானை கொலை செய்துவிட்டு போலீஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற சேலம் கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்த சதீஷ் (30), பூபாலன் (36), சரவணன் (28) ஆகியோரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா். கையில் வெட்டு காயம் அடைந்த காா்த்திகேயனும் (30) பிடிபட்டாா். இதையடுத்து, 4 பேருக்கும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதில், ரெளடி ஜான் கடந்த 2020-ஆம் ஆண்டு செல்லத்துரை என்பவரை கொலை செய்த சம்பவத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கைக்காக இந்த கொலை சம்பவம் நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஜான் கொலை வழக்கில் வெட்டுக்காயம் அடைந்த காா்த்திகேயனை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சித்தோடு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனா். மேலும், கொலை வழக்கில் தொடா்புடைய சேலத்தை சோ்ந்த பாா்த்திபன், அழகரசன், சேதுவாசன், சிவக்குமாா், பெரியசாமி ஆகிய 5 பேரையும் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், ஜான் கொலையில் தொடா்பு இருப்பதாக கருதப்பட்ட சேலம், கிச்சிபாளையம் காளியம்மன் கோயில் 4-ஆவது தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் கோகுல சுகவனேஸ்வரன் (25) ஈரோடு குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண் 3-இல் நீதித் துறை நடுவா் அப்சல் பாத்திமா முன்பு திங்கள்கிழமை காலை சரணடைந்தாா். அவரை நீதிமன்ற உத்தரவுப்படி பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று போலீஸாா் சிறையில் அடைத்தனா். செல்லத்துரையின் தம்பி ஜீவகன் (30), சலீம் (20) ஆகிய இருவரும் ஈரோடு நீதிமன்றத்தில் கடந்த 20 -ஆம் தேதி சரண் அடைந்தனா்.
ரெளடி ஜான் கொலை வழக்கில் இதுவரை 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 3 போ் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனா். 5 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.