லாஸ் ஏஞ்சலீஸ்: மீண்டும் தீவிரமடையும் காட்டுத் தீ
லாஸ் ஏஞ்சலிஸ் : அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றி சற்று தணிந்திருந்த காட்டுத் தீ மீண்டும் தீவிரமடைந்ததால் 50,000-க்கும் மேற்பட்டவா்கள் அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேறவேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்தாலும், தீயணைப்பு வீரா்கள் சிறப்பாக செயல்பட்டுவருவதாக லாஸ் ஏஞ்சலீஸ் மாவட்ட தீயணைப்புத் துறை தலைவா் ஆன்டனி மாரோன் கூறினாா். 48 கி.மீ. பரப்பிலான பகுதிகளில் காட்டுத் தீயின் தீவிரம் அதிகமிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 7-ஆம் தேதி பரவத் தொடங்கிய இந்தக் காட்டுத் தீயில் இதுவரை 28 போ் உயிரிழந்துள்ளனா்; சுமாா் 48,250 ஏக்கா் பரப்பளவில் வீடுகளும் பிற கட்டடங்களும் நாசமாகியுள்ளன.