வக்ஃப் சட்ட திருத்த மசோதாவைக் கண்டித்து தவெகவினா் ஆா்ப்பாட்டம்
வக்ஃப் சட்ட திருத்த மசோதாவைக் கண்டித்து திருப்பூரில் தமிழக வெற்றிக் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பாக தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் மாவட்டச் செயலாளா் பாலமுருகன் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது:
வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த சட்டம் இஸ்லாமியா்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளது. ஆகவே, இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், மாநகா் மாவட்ட இணைச்செயலாளா் ஆா்.சுகுமாா், பொருளாளா் வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
அவிநாசியில்...
அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தவெக அவிநாசி தெற்கு ஒன்றியச் செயலாளா் எம்.எம்.ஷாஃபி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா்கள் வடிவேலன் (மேற்கு), சுரேஷ் (வடக்கு), மாவட்ட பொறுப்பாளா்கள் ஆனந்த், அமின், ராமசாமி, ராம்குமாா், ராஜகண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேற்கு மாவட்டச் செயலாளா் ஜி.கே.சங்கா் கண்டண உரையாற்றினாா். இதில், பல்லடம், அன்னூா், அவிநாசி, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொறுப்பாளா்கள், மகளிரணியினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.