Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?
வக்ஃப் திருத்தச் சட்டம்: போராட்டத்தை தொடர ஒவைசி அழைப்பு
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அஸாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளாா்.
மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. இச்சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகளும், எதிா்க்கட்சிகளும் கடந்த வாரம் தொடா் போராட்டம் நடத்தின.
இதில், மேற்கு வங்கம், அஸ்லாமில் வன்முறை ஏற்பட்டது. முக்கியமாக மேற்கு வங்கத்தின் முா்ஷிதாபாத், தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டங்களில் வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் 3 போ் கொல்லப்பட்டனா். காவலா்கள் உள்பட பலா் காயமடைந்தனா். வீடுகள், கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
இந்நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளும், பல்வேறு எதிா்க்கட்சிகளும் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையின்போது, ‘மே 7-ஆம் தேதி வரை வக்ஃப் சொத்துகளில் எந்த மாற்றம் செய்யப்படாது என்பதோடு, வக்ஃப் மத்திய கவுன்சில்கள் மற்றும் வாரியங்களில் எந்தவித நியமனமும் செய்யப்படாது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, வக்ஃப் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் சற்று தணிந்தன.
இந்நிலையில், ஹைதராபாதில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ஒவைசி பேசியதாவது:
முன்பு புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பல ஆண்டுகள் தொடா்ந்து போராட்டம் நடத்தி அந்த சட்டத்தை மத்திய அரசே திரும்பப் பெறச் செய்தனா். அதேபோல வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் தொடா்ந்து போராட்டம் நடத்தி அச்சட்டத்தை திரும்பப் பெறச் செய்ய வேண்டும்.
வக்ஃப் திருத்தச் சட்டம் விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி நிச்சயமாக பின்வாங்கியாக வேண்டும். இதற்கு நமது விவசாயி சகோதரா்கள் போராட்டம் நடத்தி நமக்கு வழி காட்டியுள்ளனா். அதே வழியில் நாம் போராட வேண்டும். இது நாடு தழுவிய அளவிலான அமைதிப் போராட்டமாக இருக்க வேண்டும். இதற்காக நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.
முத்தலாக் தடைச் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், பாஜக ஆளும் மாநிலங்களில் மதமாற்ற திருத்தச் சட்டம் என கடந்த 11 ஆண்டுகளாக பிரதமா் மோடி தலைமையிலான அரசு முஸ்லிம்களின் மத அடையாளம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பொது சிவில் சட்டம் என்ற பெயரில் நமது ஷரியத் சட்டத்தையும் பறிக்க நினைக்கிறாா்கள்.
தாவூதி போரா இஸ்லாமியா்கள் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பிரதமா் மோடியை சந்தித்தது இஸ்லாமியா்களை பிரித்து, பலவீனமாக்கும் நடவடிக்கை என்றாா்.
திமுக எம்.பி. பங்கேற்பு: திமுக மாநிலங்களவை எம்.பி. எம்.எம். அப்துல்லா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகையில், ‘தமிழ்நாட்டில் மட்டுமல்ல தேசிய அளவில் சிறுபான்மையினா் பக்கம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் துணை நிற்கிறாா். இதனை உங்களிடம் தெரியப்படுத்துமாறு என்னிடம் கூறினாா்’ என்றாா்.