வக்ஃப் வாரிய மசோதா திருத்தங்களுக்கு நாடாளுமன்றக் குழு இன்று ஒப்புதல்!
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளுக்கு இன்று ஒப்புதல் அளிக்கப்படும் என்று அக்குழுவின் தலைவர் பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள ஏராளமான வக்ஃப் வாரிய சொத்துகளை முறைப்படுத்தும் வகையில், வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களுடன் மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது.
முஸ்லிம்களின் நிலம், சொத்துகள், மத விவகாரங்களை நிா்வகிக்கும் சுதந்திரம் ஆகியவற்றைப் பறிக்கும் நோக்கில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இதனைத் தொடர்ந்து, பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையில் கூட்டுக் குழு அமைக்கப்பட்டு மசோதாவை பரிசீலனை செய்தனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களுக்கு இன்று ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.
மொத்தம் 656 பக்கங்கள் கொண்ட அறிக்கை அனைத்து கூட்டுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பப்படும் என்றும் ஜகதாம்பிகா பால் தெரிவித்தார்.
இதையும் படிக்க : கும்பமேளா கூட்ட நெரிசல்: பலி 31-ஆக உயர்வு!
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாதோரும் உறுப்பினா்களாக இருக்கலாம் என்ற மத்திய அரசின் பரிந்துரைக்கு அந்தக் குழு ஒப்புதல் அளிக்கத் தயாராகியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மசோதாவில் 14 சட்டப் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பாக குழுவில் இடம்பெற்றுள்ள ஆளுங்கட்சி எம்.பி.க்கள் தரப்பில் முன்மொழியப்பட்ட 32 திருத்த பரிந்துரைகளை கூட்டுக் குழு முழுமையாக ஏற்றுக்கொண்டது.
ஆனால், மசோதாவின் 44 சட்டப் பிரிவுகளிலும் திருத்தங்கள் மேற்கொள்வது தொடா்பாக எதிா்க்கட்சிகள் தரப்பில் முன்மொழியப்பட்ட 500-க்கும் மேற்பட்ட திருத்த பரிந்துரைகளை கூட்டுக் குழு முழுமையாக நிராகரித்தது.
இதனிடையே, மசோதாவை ஆய்வு செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கூடிய கூட்டுக் குழுவின் 35-ஆவது கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது. அமளியில் ஈடுபட்டதாக 10 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே ஒப்புதல்: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ள ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, கூட்டத்தொடரின் முதல் பாதியிலேயே வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்து, நாடாளுமன்ற ஒப்புதலையும் பெற்றுவிட முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.