வங்க மொழி சர்ச்சை: நீண்ட பதாகைகளுடன் போராடிய கால்பந்து ரசிகர்கள்!
தில்லி காவல் துறையின் வங்கதேச மொழி சர்ச்சைக்கு ஈஸ்ட் பெங்கால் கால்பந்து ரசிகர்கள் மிகப்பெரிய பதாகைகளை காண்பித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
மத்திய உள்துறை அமைச்சரவையின்கீழ் இயங்கும் தில்லி காவல் துறை வங்காள மொழியை ’வங்கதேச மொழி’ எனக் குறிப்பிட்டிருந்தது.
நம் நாட்டுப்பண் இயற்றப்பட்ட வங்க மொழிக்கு இழைக்கப்பட்டுள்ள நேரடி அவமதிப்பு என தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் டூரண்டு கோப்பை போட்டியில் ஈஸ்ட் பெங்கால் - நம்தாரி அணிகளுக்கான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் 1-0 என வென்றது.
சுதந்திரத்திற்காக போராடிய நாங்கள் வங்கதேசத்தினரா?
இந்தப் போட்டியின்போது ஈஸ்ட் பெங்கால் ரசிகர்கள் மிகப்பெரிய பதாகைகளை வைத்து பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்கள்.
அந்தப் பதாகையில், “நாங்கள் சுதந்திரத்துக்காக துக்கில் தொங்கினோம். தற்போது, எங்களது தாய்மொழியைப் பேசுவதால் வங்கதேசத்தவர் (பங்களாதேஷி) என்று அழைக்கப்படுகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
যতই তুমি নিভিয়ে দিতে চাও ভাষার আলো
— East Bengal Ultras - North Bengal Wing (@ebultrasnbwing) August 6, 2025
প্রতিবাদের রূপ হবে ততই জোরালো https://t.co/B2YVo5E68t
சமூக வலைதளத்தில் இந்தப் பதாகைகள் வைரலாகி வருகிறது. மேற்கு வங்காளத்தில் இடம்பெயர்ந்தோர்கள் பலரும் குறிவைக்கப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
தில்லி காவல்துறையில் கடிதத்திற்கு மமதா பானர்ஜி, ”அவதூறான, அவமதிக்கும், தேச விரோதமான, அரசியலமைப்பிற்கு விரோதமானது செயல்” எனக் கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஈஸ்ட் பெங்கால் கால்பந்து அணி
கொல்கத்தாவில் மிகவும் பிரபலமான ஈஸ்ட் பெங்கால் கால்பந்து அணி 1920 ஆண்டு உருவாக்கப்பட்டது.
நூற்றாண்டைக் கடந்த இந்த கால்பந்து அணி டூரண்ட் கோப்பையில் 16 முறை கோப்பை வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது. மோகன் பகான் 17 முறை வென்றுள்ளது.
மொழி சர்ச்சைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த இவர்களது செயல் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது.
கடந்தாண்டு கொல்கத்தாவில் நிகழ்ந்த மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமையால் நிகழ்ந்த மரணத்துக்கு போட்டியாளர்களான ஈஸ்ட் பெங்கால் கால்பந்து அணி, மோகன் பகான் அணி ரசிகர்கள் இணைந்து போராடியது குறிப்பிடத்தக்கது.