நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டுவதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
வடகிழக்குப் பருவமழை: "திமுக அரசின் தோல்வியால் 34 பேர் பலி" - ஆர்.பி. உதயகுமார் சொல்வதென்ன?
"வடகிழக்குப் பருவமழையில் 34 பேர் பலி என்பது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தோல்வியைக் காட்டுகிறது. மக்களைக் கைவிட்டால், மக்கள் விரைவில் உங்களைக் கைவிடும் காலம் வரும்" என்று அ.தி.மு.க- வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அக்டோபர், நவம்பர், டிசம்பர் மூன்று மாதங்களில் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இருக்கும், இதன் காரணமாகத் தமிழகத்தில் இன்று முதல் 13 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பொழிந்து வருகிறது.
வடகிழக்குப் பருவமழையில் தமிழகத்தில் இதுவரை 34 பேர்கள் பலியாகி உள்ளதாகத் தகவல் வேதனை தரக்கூடியது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தோல்வியை இந்த உயிரிழப்பு காட்டுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் வடகிழக்குப் பருவமழையால் 34 பேர்கள் பலியாகி உள்ளனர்.
எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எந்த உயிரிழப்புகளும் இல்லாமல் எதிர்கொள்வோம் என்று முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் கூறினார்கள். ஆனால், இன்றைக்கு நிலவரம் கலவரமாக மாறிவிட்டது.
34 பேர் பலியானது மட்டுமின்றி, 500 கால்நடைகள் இறந்து போயுள்ளன. 864 குடிசைகள் சேதம் அடைந்துள்ளன. மழைநீரில் 89,000 ஏக்கர் பயிர்கள் மூழியுள்ளன. இதில் 5,856 ஏக்கர் பயிர்கள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளன. 919 ஏக்கர் தோட்டப் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து விட்டோம் என்று அரசு சொன்னது. ஆனால் உயிர்ச் சேதம், பொருள் சேதத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
சமீபத்தில் பெய்த இரண்டு நாள் மழைக்கே மதுரை தத்தளித்தது. கழிவுநீருடன் கலந்து துர்நாற்றம் வீசியது. பணியாளர்கள் இல்லை, மீட்பு நடவடிக்கைகள் இல்லை. அமைச்சர்கள் முகாமிட்டுள்ளார்கள் என்று முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தும், துறை வரியாக இடைவெளி ஏற்பட்டது.
துறைகளுக்குள் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படவில்லை. துப்புரவுப் பணியாளர் பற்றாக்குறை, பம்பு செட் பற்றாக்குறை, கேபிள் மற்றும் பாதாளச் சாக்கடைக்குத் தோண்டிய பள்ளங்களைச் சரிவர மூடவில்லை, இதனால் நீர்த் தேக்கம் ஏற்பட்டு மதுரையே ஸதம்பித்தது. இதற்கு முழுமையான தீர்வு காணப்படவில்லை.
தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து கூடுதலாகக் கவனத்தைச் செலுத்த வேண்டும், அதேபோல் குழுக்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும். அக்டோபர் மாதம் முடிந்து விட்டது, நவம்பர், டிசம்பர் மாதங்கள் உள்ளது. இப்போதாவது இந்த அரசு விழித்துக் கொள்ளுமா?
முதலமைச்சர் துறை வாரிய ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார். ஆய்வுக் கூட்டம், அறிக்கையால் மக்களைக் காப்பாற்ற முடியாது. களப்பணியால்தான் காக்க முடியும். விளம்பரம் வெளிச்சம் மக்களுக்குப் பயன் தராது. வடகிழக்குப் பருவமழை குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி வருகிறார். ஆனால் அரசு காது கொடுத்துக் கேட்கவில்லை. இந்த அரசிடம் கனிவு, அக்கறை இல்லை. அதேநேரம் ஆணவப் போக்குடன் உள்ளது. இது அழிவுக்குத்தான் கொண்டு செல்லும். இது மக்களுக்கு விடியல் தருகின்ற முயற்சியாக நமக்குத் தெரியவில்லை. மக்களை நீங்கள் கைவிட்டால் மக்கள் உங்களைக் கைவிடும் காலம் நிச்சயம் வரும்." என்று தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs