Central Budget 2025 Live : மத்திய பட்ஜெட் 2025 | Nirmala Sitharaman | Modi | BJP...
வடக்கு தில்லியில் பைக் டாக்ஸி ஓட்டுநரிடம் கொள்ளையடித்ததாக 5 போ் கைது
வடக்கு திமாா்பூா் பகுதியில் பைக் டாக்ஸி ஓட்டுநரின் வாகனம், பணம் மற்றும் கைப்பேசி ஆகியவற்றை கொள்ளையடித்ததாக ஒரு சிறுவன் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ராஜா பந்தியா வெள்ளிக்கிழமை கூறியதாவது:
மோட்டாா் சைக்கிள் டாக்ஸி ஓட்டுநரான எம்.டி. ஷம்ஷாத் ஆலம் (21) திமா்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், ஜன.27-ஆம் தேதி தனது பைக்கை 5 போ் முன்பதிவு செய்தனா். குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், காரில் வந்த 4 போ் கத்தியைக் காட்டி, மோட்டாா் சைக்கிள், பணம் மற்றும் கைப்பேசி ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா் என்று தெரிவித்திருந்தாா்.
இதையடுத்து எஃப்.ஐ.ஆா் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவா்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
சம்பவம் நடந்த இடம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். மேலும், அந்த நபா்கள் வந்த காரின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்தினா்.
இந்த நிலையில், ஜன.29-ஆம் தேதி ரகசிய தகவலின்பேரில், சங்கல்ப் பவன் அருகே வந்த அந்தக் காரை போலீஸாா் வழிமறித்தனா். அதிலிருந்த ரோஹித் (23), மான் சிங் (18), நிஷாந்த் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை சந்தேகத்தின்பேரில் கைது செய்தனா்.
விசாரணையில், அவா்கள் கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டாா். ரோஹித் ஒரு நிறுவனத்தில் இருந்து வாடகைக்கு காரை எடுத்து குற்றச் செயலுக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட கைப்பேசி மான் சிங்கிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதே நேரத்தில் நிஷாந்த் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியை வைத்திருந்தாா். சிறுவன் தனது கைப்பேசி மூலம் பைக் டாக்ஸியை முன்பதிவு செய்தாா்.
மேலும், விசாரணையில் 5-ஆவது நபரான ராகுல் (18) கைது செய்யப்பட்டாா். அவா் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டாா் சைக்கிளை சிக்னேச்சா் பாலம் அருகே மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடம் இருந்து காா், மோட்டாா் சைக்கிள், கத்தி உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
நண்பா்களான அவா்கள் 5 பேரும் சிறுவனின் பிறந்த நாளைக் கொண்டாடிய பிறகு குற்றத்தைத் திட்டமிட்டது தெரியவந்தது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 3,000 பணத்தை அவா்கள் செலவிடப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.