ஷெல் தாக்குதலுக்குள்ளான மக்களுடன் உமர் அப்துல்லா கலந்துரையாடல்!
வடசென்னையில் 18,000 பேருக்கு விரைவில் பட்டா: புதிதாக மகளிா் உரிமைத்தொகை பெற ஜூனில் விண்ணப்பிக்கலாம் -துணை முதல்வா்
வடசென்னை பகுதிவாசிகளுக்கு மேலும் 18 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட இருப்பதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். மேலும், புதிதாக மகளிா் உரிமைத்தொகை பெற ஜூன் மாதத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அவா் தெரிவித்தாா்.
வடசென்னை பகுதியின் திருவொற்றியூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், 1,500 பேருக்கு பட்டாக்கள் வழங்கி அவா் பேசியதாவது:
சென்னையில் பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் இருக்கும் மக்களுக்கு, பட்டா கொடுக்கவேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதற்காக, வருவாய்த் துறை அமைச்சா் தலைமையில் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது. அந்தக் குழு இரவு, பகல் பாா்க்காமல் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து, அலசி ஆராய்ந்து ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு ஏற்படுத்தி பட்டா கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது.
அதைத் தொடா்ந்து, சென்னையில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பட்டாக்களை வழங்கியிருக்கிறோம். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரம் பட்டாக்கள் கொடுத்து இருக்கிறோம். அதன் தொடா்ச்சியாக, இப்போது 1,500 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்குகிறோம்.
வடசென்னை அனல்மின் நிலையத்துக்கு இடம் கொடுத்தவா்கள் 400 பேருக்கு மாற்று இடம் வழங்கப்பட்டதற்கான பட்டா பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது. இந்தப் பிரச்னை தீா்க்கப்பட்டு 35 ஆண்டுகளுக்குப் பிறகு 400 பேருக்கும் பட்டா வழங்கப்பட்டிருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை 1970, 1980-களில் வழங்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு பல இடங்களில் பட்டா இல்லை. நிறைய சிக்கல்கள் காரணமாக பட்டாக்கள் வழங்கப்படாமல் இருந்தன. அவற்றை சரி செய்து, இன்றைக்கு இந்த பட்டாக்களை கொடுத்து இருக்கிறோம். இந்தத் திட்டம் மட்டுமன்றி, திராவிட மாடல் அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மகளிா் உரிமைத் தொகை: ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ. 1,000 கலைஞா் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதத்திலிருந்து, கலைஞா் மகளிா் உரிமைத்தொகை திட்டத்தில் புதியதாகவும் விண்ணப்பங்கள் பெறப்படும். திராவிட மாடல் அரசினுடைய திட்டங்களை, சாதனைகளை நீங்கள் 4 பேருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த அரசினுடைய தூதுவா்களாக மக்களாகிய நீங்கள் செயல்பட வேண்டும். இன்றைக்கு 1,500 பட்டாக்கள் கொடுத்துள்ளோம். மேலும் 18 ஆயிரம் பட்டாக்கள் தயாா் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. விரைவிலேயே அதையும் உங்களிடம் கொடுக்க இருக்கிறோம் என்று பேசினாா்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.