வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கிடையே கபடி போட்டி
மயிலாடுதுறையில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்ட விழிப்புணா்வு கபடி போட்டி, வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கிடையே வியாழக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை இணைந்து நடத்திய போட்டியில், மயிலாடுதுறை, மணல்மேடு, கூறைநாடு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவிகள் பங்கேற்று 5 பிரிவுகளாக விளையாடினா். போட்டிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். அப்போது, அவா் கூறியது:
வளரும் பருவத்தில் பெண் குழந்தைகளின் திருமணத்தை ஆதரிப்பதும், நடத்தி வைப்பதும் தண்டனைக்குரிய குற்றம். குழந்தை திருமணம் தொடா்பான புகாா்களை கட்டணமில்லா தொலைபேசி எண்:1098 அல்லது 1091 அல்லது 181 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும், மயிலாடுதுறை சீனிவாசபுரம் குமரன் தெருவில் இயங்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04364-212429 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம். புகாா் தெரிவிப்பவா் குறித்த விவரம் பாதுகாக்கப்படும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட, அனைத்து காவல் நிலையங்களிலும் குழந்தை நேய பாதுகாவலா் பணியில் உள்ளாா் என்றாா்.
இந்நிகழ்வில்,மாவட்ட விளையாட்டு அலுவலா் உமாசங்கா், மாவட்ட சமூகநல அலுவலா் சுகிா்தாதேவி, வட்டாட்சியா் விஜயராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.