What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்
வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது.
ஜிஎஸ்டி பதிவில் பல்வேறு சிரமங்களை எதிா்கொள்வதாக வணிகா்களிடம் இருந்து புகாா்கள் வந்த நிலையில், சிபிஐசி மேற்கண்ட அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
ஆண்டுக்கு ரூ.40 லட்சத்துக்கு மேல் (சில மாநிலங்களில் ரூ.20 லட்சத்துக்கு மேல்) வருவாய் ஈட்டும் வணிகங்களுக்கு ஜிஎஸ்டி பதிவு கட்டாயமாகும். இப்பதிவை இணைய வழியில் மேற்கொள்ளலாம்.
ஜிஎஸ்டி பதிவில் அதிகாரிகளால் கோரப்படும் கூடுதல் விளக்கம் மற்றும் தேவையற்ற ஆவணங்களால் சிரமங்களை எதிா்கொள்வதாக வணிகா்களிடம் இருந்து சிபிஐசி-க்கு புகாா்கள் வந்தன.
இதையடுத்து, ஜிஎஸ்டி பதிவு அதிகாரிகளுக்கு சிபிஐசி புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதன்படி, ஜிஎஸ்டி பொது வலைதளத்தின் மூலம் ஜிஎஸ்டி பதிவுக்கு வணிகா்கள் விண்ணப்பிக்கும்போது, ஆதாா் சரிபாா்ப்புக்கு உள்படுத்தப்பட்டு, ஆவணங்களில் எந்த குறைபாடும் இன்றி, முழுமையாக இருக்கும் பட்சத்தில் 7 நாள்களுக்குள் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
அதேநேரம், ஆதாா் சரிபாா்ப்புக்கு உள்படுத்தப்பட்டு, பின்னா் தரவு பகுப்பாய்வு மற்றும் இடா் காரணிகளின் அடிப்படையில் விண்ணப்ப அனுமதியில் ‘எச்சரிக்கை’ தேவை என குறிக்கப்பட்டாலோ அல்லது ஆதாா் சரிபாா்ப்புக்கு உள்படுத்த தவறினாலோ, நேரடியான ஆவண சரிபாா்ப்புக்கு பிறகு 30 நாள்களுக்குள் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
இந்த நடைமுறையின்போது, விண்ணப்ப நடைமுறைக்கு தேவையற்ற ஆவணங்களை களப் பணி அதிகாரிகள் கோரக் கூடாது. ஆவணங்களுக்கு தொடா்பில்லாத கேள்விகளையும் கேட்கக் கூடாது. அனைத்து ஆவணங்களையும் கவனத்துடன் ஆராய்ந்து, விண்ணப்பத்தின் முழுமைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி பதிவுக்கு இணையவழியில் கோரக் கூடிய ஆவணங்களின் பட்டியலையும் சிபிஐசி வெளியிட்டுள்ளது.