வணிகா் தின மாநாடு: நாமக்கல் மாவட்டத்தில் கடையடைப்பு
நாமக்கல்: வணிகா் தின மாநாட்டையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.
ஒவ்வோா் ஆண்டும் மே 5-ஆம் தேதி வணிகா் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் மாநில மாநாடு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டிற்கான வணிகா் தின மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெற்றது.
இதில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டனா். மாநாட்டையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் கடைகளை அடைத்து குடும்பத்தினருடன் பங்கேற்றனா். அந்த வகையில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், குமாரபாளையம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்கள் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து மாநாட்டில் கலந்துகொண்டனா். இதனால் மக்கள் நடமாட்டம் மிகுந்த வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.