வண்டி ஓட்டும்போது ஹெல்மெட் அணிபவரா?
நாடு முழுவதும், சாலை விபத்துகளின்போது மூளையில் காயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் இருசக்கர வாகன ஓட்டிகள் என்று வேலூரில் இயங்கி வரும் சிஎம்சி மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-2019ஆம் ஆண்டு வரையில், மருத்துவமனையில் விபத்தில் சிக்கி தலையில் பலத்த அடிபட்டு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் தரவுகளை திரட்டி தொகுத்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.
இந்த மருத்துவமனையின் தரவுகளின்படி, சாலை விபத்துகளில் 77,539 இருசக்கர வாகன ஓட்டிகள் மரணமடைந்திருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் விபத்துகளில் சிக்குபவர்கள் மற்றும் மரணமடைபவர்கள் என அனைத்திலுமே இருசக்கர வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தே வருகிறது.
இதில் முக்கிய தரவு சொல்வது என்னவென்றால், 3,172 பேர் மூளையில் காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் 2,259 பேர், இவர்களில் வெறும் 13 பேர்தான் விபத்தில் சிக்கும்போது ஹெல்மெட் அணிந்திருந்தவர்கள். அதாவது, விபத்தில் சிக்கி தலையில் காயத்துடன் வந்தவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானர்கள்தான் ஹெல்மெட் அணிந்திருக்கிறார்கள். எனவே, வாகனத்தை எடுக்கும்போதே, கையில் சாவியுடன் ஹெல்மெட் எடுக்க வேண்டும் என்பதைத்தான் இந்த தரவு குறிப்பிடுகிறது.
ஒரு மருத்துவமனையில் தலையில் காயத்துடன் வருபவர்களில் பெரும்பாலானோர் சாலை விபத்தில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டிகள்தான். அதிலும் கடந்த 3 - 9 மாதங்களில் 540 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இதில் 82 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 நாள்களிலும் 108 பேர் நான்கு நாள்களிலும் 147 பேர் எட்டு நாள்களிலும் இறந்திருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் வெறும் 4 சதவீதம் பேருக்குத்தான் மருத்துவக் காப்பீடு இருந்திருக்கிறது என்கிறது புள்ளிவிவரம்.