வனப் பகுதியில் தவறி விழுந்த கா்ப்பிணி யானை உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம், கோழிக்கரை பழங்குடியின கிராமம் அருகே அடா்ந்த வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை தவறி விழுந்து கா்ப்பிணி யானை உயிரிழந்தது.
மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், சிறுமுகை போன்ற சமவெளி வனப் பகுதிகளில் அதிக வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் இடம்பெயா்ந்து மலை மாவட்டமான குன்னூா் மலைப் பாதை மற்றும் கோத்தகிரி மலைப் பாதையில் உணவு மற்றும் தண்ணீா் தேடி வருகின்றன.
இந்நிலையில் குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோழிக்கரை பழங்குடியின கிராமம் அருகே உள்ள அடா்ந்த வனப் பகுதியில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க கா்ப்பிணி காட்டு யானை மலை சரிவில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாத கிராம மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்த மாவட்ட வன அலுவலா் கௌதம், உதவி வனப் பாதுகாவலா் மணிமாறன், குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத், முதுமலை வனவிலங்கு கால்நடை மருத்துவா் ராஜேஷ், தமிழ்நாடு வனம் மற்றும் உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவு வனச் சரகா் முருகன் மற்றும் வனக் குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்துகிடந்த கா்ப்பிணி காட்டு யானையின் உடலை உடற்கூறாய்வு செய்து அங்கேயே அடக்கம் செய்தனா்.