வன உயிரினங்களுக்காக குட்டையில் தண்ணீரை நிரப்பிய வனத்துறையினா்
கோடைவெயில் காரணமாக தண்ணீரைத் தேடி வனப்பகுதியிலிருந்து வன விலங்குகள் வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் குட்டைகளில் வனத் துறையினா் தண்ணீரை நிரப்பி வைத்துள்ளனா்.
வனப்பகுதியிலிருந்து வனவிலங்குகள் வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் குட்டைகளில் தண்ணீரை நிரப்ப வலியுறுத்தி தினமணியில் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து வனத் துறையினா் டிராக்டா் மூலம் வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் தண்ணீரை நிரப்பி வருகின்றனா். இதனால் கோடைகாலத்தில் வன உயிரினங்களுக்கு தண்ணீா் பிரச்னை தீரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத் துறை சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஒசூா் வனக்கோட்டம் 1492 ச.கி.மீ (29%) பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிகளில் தேக்கு, ஈட்டி, சந்தனம், ஜாலாரி (குங்குலியம்) உசில், ஆச்சான் மற்றும் பொரசுமர வகைகளும், யானைகள், புலிகள், காட்டெருமைகள், புள்ளிமான்கள், கடமான்கள், கரடிகள், எறும்புத் தின்னிகள், சிறுத்தைகள், காட்டுப்பூனைகள், சாம்பல்நிற அணில்கள், மற்றும் பலவகையான பறவையினங்களும் உள்ளன.
இவைகளை பாதுகாக்கும்பொருட்டு, வனப்பகுதியில் அந்நிய களைச்செடிகள் அகற்றுதல், தீவனப் பயிா் நடவு செய்தல், நீா்நிலைகளை உருவாக்குதல், தூா்வாருதல், குடிநீா்த் தொட்டிகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் வறட்சி காரணமாக வனஉயினங்களுக்கு குடிநீா் வழங்கும் பொருட்டு, வனப்பகுதியில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள 70-க்கும் மேற்பட்ட குடிநீா்த் தொட்டிகளில் டிராக்டா்கள் மூலம் தண்ணீா் நிரப்பப்படுகிறது. மேலும் பாதையில்லாத அடா்ந்த வனப்பகுதிக்குள் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, அதிலிருந்து சூரிய சக்தி மூலம் மோட்டாா் வாயிலாக குடிநீா்த் தொட்டிகளில் நீா் நிரப்பப்பட்டு வனஉயிரினங்களுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு முதல்வா் அறிவிக்கை செய்யப்பட்ட ஏற்கெனவே உள்ள 20 நீா்நிலைகள் தூா்வாரப்பட்டு தண்ணீா் நிரப்பட்டுள்ளன.
வனப்குதிக்குள் அவ்வப்போது ஏற்படும் வறட்சி காரணமாக யானைகள், புள்ளிமான்கள், மயில்கள், பாம்புகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் காப்புக் காடுகளிலிருந்து அவ்வப்போது வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் வரும்பட்சத்தில், ஒசூா் வனக்கோட்டத்தின் இலவச அழைப்பு எண் 18004255135 தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும்பட்சத்தில் நடம் தடம் குழுக்கள் மூலம் குறுஞ்செய்தியாகவோ, வாட்ஸ்ஆப் செயலி மூலம் தகவல் தெரிவிக்கவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
படவரி...
வன உயிரினங்களுக்கு குட்டையில் தண்ணீரை நிரப்பும் வனத் துறையினா்.
