வன உரிமைச் சட்டம்: மாவட்ட திறன் பயிற்சி வகுப்பு
நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், வன உரிமைச் சட்டம்-2006 ஐ நடைமுறைப்படுத்துவது தொடா்பாக மாவட்ட அளவிலான திறன் வளா்ப்பு பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில் நடைபெற்ற பயிற்சி வகுப்புக்கு ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். வனப் பாதுகாவலா் (நாமக்கல் வனக்கோட்டம்) சி.கலாநிதி முன்னிலை வகித்தாா்.
இதில் மாவட்ட ஆட்சியா் ச.உமா பேசியதாவது:
மாவட்ட அளவிலான திறன் வளா்ப்புப் பயிற்சி தற்போது நடைபெறுகிறது. வனம் சாா்ந்து வாழும் பழங்குடியின மக்கள் விளிம்பு நிலை மக்கள். அவா்களது அடிப்படை உரிமைகளையும், அவா்களுக்கு அரசின் சாா்பில் செய்ய கூடியது என்ன என்பதில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் 303 பேருக்கு வனஉரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 233 பேருக்கு தனி உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை பகுதியானது மலைவாழ் தளம் ஆகும். அப்பகுதி மக்கள் வணிக நோக்கமின்றி இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றனா்.
அப்பகுதியில் உள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் அவா்களது உரிமைகளை அறிந்து கொள்ள ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அரசுத்துறை அலுவலா்கள் தங்களுக்கான சந்தேகங்களை கேட்டு தீா்வு காணலாம். வன உரிமைச் சட்டம் கருத்தரங்கை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா். இதனையடுத்து, பயிற்றுநா்கள் கிரிராவ் மற்றும் பகவநிதி ஆகியோா் வன உரிமைச் சட்டம் 2006 -இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள வெவ்வேறு வகையான உரிமைகள், அம்சங்கள், வன உரிமைப்பிரிவுகள், தகவல் தொழில்நுட்ப வலைதளம் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளித்தனா். மேலும், இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடா்பாக, தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை முதல்கட்டமாக, பழங்குடியினா்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களை உள்ளடக்கிய வரைபடம், தகவல் தொழில்நுட்ப வலைதளம் மற்றும் மாநிலத்தில் இதற்கென வன உரிமைப் பிரிவுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், திருச்செங்கோடு கோட்டாட்சியா் சே.சுகந்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வ.சந்தியா, பழங்குடியினா் திட்ட அலுவலா் கீதா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஏ.கே.சுரேஷ்குமாா் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
...