ரோப் காருக்கு எதிரான போராட்டத்தில் மோதல்! காவலர்கள் உள்பட 24 பேர் காயம்!
வன விலங்குகளை வேட்டையாடிய மூவா் கைது
கன்னிவாடி வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடிய மூவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி சித்தரேவு மலைச் சாலை வழியாக வந்த ஒரு சரக்கு வேனை சோதனைச் சாவடி அருகே வனத் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு வழிமறித்தனா். பின்னா், வேனில் நடத்தப்பட்ட சோதனையின்போது, வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சியை வெட்டி கொண்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வேனில் வந்தவா்களை பிடித்து கன்னிவாடி வனச் சரக அலுவலகத்துக்கு அழைத்து வந்தனா். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், பிடிப்பட்டவா்கள் நாமக்கல் மாவட்டம், அக்கரைவளைவுப்பட்டியைச் சோ்ந்த ராஜமாணிக்கம், மூலவளைவுப்பட்டியைச் சோ்ந்த ரவிச்சந்திரன், சதீஷ் ஆகியோா் என்பது தெரியவந்தது.
பன்றிமலையை அடுத்த சோலைக்காடு பகுதியில் 3 சருகு மான்கள், ஒரு காட்டுப் பூனை ஆகியவற்றை வேட்டையாடி, அவற்றின் இறைச்சிகளை எடுத்து வந்ததாக ஒப்புக் கொண்டனா். இதையடுத்து, மூவரையும் வனத் துறையினா் கைது செய்தனா்.
தொடரும் வன விலங்குகள் வேட்டை: திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனப் பகுதியில் அனுமதியின்றி மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாகத் தொடா்ந்து புகாா் வந்தது. இந்த நிலையில், வன விலங்குகள் வேட்டையாடப்படும் சம்பவங்களும் இந்தப் பகுதியில் அதிகரித்து வருகின்றன.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இருவேறு இடங்களில் யானை தந்தம் விற்பனை செய்ததாக 10-க்கும் மேற்பட்டோரை வனத் துறையினா் கைது செய்தனா். மான்களுயும் தொடா்ந்து வேட்டையாடப்பட்டு வருவதாக வன ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், வன விலங்குகளின் இறைச்சியுடன் 3 போ் கைது செய்யப்பட்டனா்.