``வரலாறு தெரியாமல் பேசி அரசியல் செய்கிறார் அண்ணாமலை...'' - செல்வப்பெருந்தகை கொதிப்பு!
காங்கிரஸ் கட்சியின் மீனவர் பிரிவு சார்பில் பாம்பனில் கொடியேற்று விழா நடைபெற்றது. காங்கிரஸ் மீனவர் பிரிவின் தேசிய தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பெர்ணான்டோ தலைமையில் நடந்த இந்த விழாவில் காங்கிரஸ் மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-23/n90hyhfl/செல்வப்பெருந்தகை.jpg)
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, "2014-ல் கடல் தாமரை மாநாடு நடத்திய பாஜக தலைவர்கள் 'மோடி பிரதமராக வந்தால் தமிழக மீனவர்களின் ஒரு படகு கூட பறிமுதல் செய்யப்படாது. வலைகள் சேதப்படுத்தபடாது. மீன்கள் பறிமுதல் செய்யப்படாது. மீனவர்களின் துன்பம், துயரம், வேதனை தீர்க்கப்படும்' என வாக்குறுதி கொடுத்தனர். 'ஒரு மீனவர் கூட கைது செய்ய இடம் கொடுக்க மாட்டோம். வலிமையாக உள்ள இந்திய போர் கப்பல்களை சர்வதேச எல்லையில் நிறுத்தி மீனவர்களை காப்போம்'என்றனர்.
ஆனால் இன்றைக்கு சீனாவிடம் அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் பகுதிகளை பறிகொடுத்துவிட்டு கைகட்டி நிற்பதுதான் பா.ஜ.க-வின் ராஜதந்திரமாக உள்ளது. 0.75 ச.கி.மீட்டர் பரப்பளவு கொண்ட கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்து, பாக் ஜலசந்தி பகுதியில் 4 ஆயிரம் ச.கி.மீட்டர் கடல் பரப்பை இந்தியாவின் பகுதியாக அதிகரித்து தந்தவர் அன்னை இந்திர காந்தி. விரிவு படுத்தப்பட்ட இந்த இந்திய கடற்பரப்பில் உலகில் இல்லாத கனிம வளங்கள், இயற்கை வளங்கள் நிறைந்திருக்கிறது. இதனால்தான் பா.ஜ.க அரசு இப்பகுதியில் ஆய்வு நடத்த முயன்றது. ஆனால் ஆய்வுக்கு எழுந்த எதிர்பினால் இதனை கிடப்பில் போட்டுள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-23/j8c6e8nu/செல்வப்பெருந்தகை-1.jpg)
ஆள் இல்லாத கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்து, வளம்மிக்க கடல் பரப்பை நாட்டிற்கு வாங்கித் தந்த அன்னை இந்திராவின் செயல் திட்டம் தேசபற்று கொண்டது. இதனால்தான் பா.ஜ.க-வின் பிதாமகன் என கூறப்படும் வாஜ்பாய், அன்னை இந்திராவை துர்க்கா தேவி என்றார். இதனை பா.ஜ.க தலைவர்களால் மறுக்க முடியுமா? இத்தகைய வரலாறு, பூகோளம், சரித்திரம் என எதுவும் தெரியாமல் இறந்தவர்கள் குறித்து பேசி அண்ணாமலை அரசியல் செய்கிறார். அப்படி பேச பா.ஜ.க-வின் எந்த தலைவருக்கும் அருகதை இல்லை'' என்றார்.
மேலும் ‘’புதிய பாம்பன் பாலம் கட்டப்பட்டு பல மாதம் ஆன நிலையில் இன்னுன் அதனை பயன்பாட்டிற்கு ஏன் கொண்டு வரவில்லை என அண்ணாமலை மத்திய அரசிடம் கேட்டுச் சொல்ல வேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் திருவாடானை எம்.எல்.ஏ கரு.மாணிக்கம், காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜாராம் பாண்டியன், பாரிராஜன், தெய்வேந்திரன், ராஜீவ்காந்தி, ரிச்சர்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.