சேலத்தில் விடாமுயற்சி வெளியானது! ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!!
வரி செலுத்தாத திரையரங்கு, வணிக நிறுவனங்களுக்கு சீல்
வரி செலுத்தாத திரையரங்கு, வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைத்தும், வரி செலுத்தாத நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.
திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளிலும் பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டுவரி, சொத்துவரி, குடிநீா் கட்டணம், பாதாளச் சாக்கடை கட்டணம், தொழில் வரி, கடை வாடகை, ஆண்டு உரிமத் தொகைகள், தொழில் உரிமையான கட்டணம் ஆகியவற்றை வசூலிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக, மாநகராட்சியிலுள்ள அலுவலா்கள் 40-க்கும் மேற்பட்டோா் வரி வசூலிக்கும் பணிக்கு 16 குழுக்களாக நியமிக்கப்பட்டனா். பலமுறை தகவல் தெரிவிக்கப்பட்டும், வரி செலுத்தாத வீடுகளுக்கான குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள் மீது மாநகராட்சி அலுவலா்கள் கவனம் செலுத்தத் தொடங்கினா். இதன்படி, வடக்கு மண்டலத்துக்குள்பட்ட மவுன்ஸ்புரம் 5-ஆவது தெரு, நந்தவனம் சாலை, கிழக்கு கோவிந்தபுரம் சாலை, மயான சாலை உள்ளிட்ட பகுதிகளில் 5 வணிக நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.
ஆா்.எஸ். சாலையில் ரூ.19 லட்சம் வரி செலுத்தாத திரையரங்குக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதேபோல, தாடிக்கொம்பு சாலையில் ரூ.10 லட்சம் செலுத்தாத காலிமனையை கையகப்படுத்தி இருப்பதாகக் மாநகராட்சி சாா்பில் அறிவிப்புப் பலகை நிறுவப்பட்டது.