ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள்... புச்சி பாபு தொடரில் சதமடித்த ருதுராஜ்!
'வருந்தச் செய்யும்' ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு! யாருக்குத்தான் டிக்கெட் கிடைக்கிறது?
திருவிழாக்கள், பண்டிகை நாள்களையொட்டி பயணம் மேற்கொள்ள, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது கடுமையான சவாலானதாக மாறிவிட்டிருப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஏழை, எளிய மக்கள், கர்ப்பிணிகள், தாய்மார்கள், முதியோர்கள் பலரும் பயணங்களுக்கு ரயில் போக்குவரத்தையே நம்பியிருக்கின்றனர். சாதாரண படுக்கை பெட்டிகளில் கட்டணம் குறைவு என்பதாலும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இருக்கும் என்பதாலும் ரயிலில் பயணிக்கவே முன்னுரிமை அளிக்கின்றனர்.
ஆனால், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது இப்போது சாதாரணமானதாக இல்லை (ஓட்டப்பந்தயத்திற்கு தயாராக நிற்பதுபோல) பெரும்பாலானோருக்கு கடும் சவாலாகவே மாறிவிட்டது. சில நாள்களுக்கு முன்பு தீபாவளி (அக். 20 ) பண்டிகைக்கான (60 நாள்களுக்கு முன்னால் முன்பதிவு செய்ய வேண்டும்) டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு தீபாவளி டிக்கெட் முன்பதிவு நாள்களில் பெரும்பாலானோருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் நெல்லை, பொதிகை, முத்துநகர், பாண்டியன், கன்னியாகுமரி உள்ளிட்ட அதிவிரைவு ரயில்களில் தொடர்ந்து 3, 4 நாள்கள் (அக். 16,17,18, 19) டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் 'வருந்துகிறோம்'(REGRET) என்று வந்துவிட்டது. சொந்த ஊர்களில் இருந்து நகரங்களுக்குத் திரும்பும் முன்பதிவு டிக்கெட்டுகளுக்கும் இதேநிலைதான்.
டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிப்போரின் விவரங்கள் முன்கூட்டியே ஐஆர்சிடிசி கணக்கில் சேர்க்கப்பட்டுவிடுகிறது. கட்டணம் செலுத்தும் முறையும் ஐஆர்சிடிசி இ-வாலட், யுபிஐ என எளிமையான, விரைவான வசதிகள் வந்துவிட்டன. அதனால் தொடர்ந்து டிக்கெட் முன்பதிவு செய்வோர் ஒரு நிமிடத்திற்குள்ளாகவே அதாவது 8.01-க்கே முன்பதிவு செயல்முறையை முடித்துவிடுகின்றனர். பணமும் வங்கிக்கணக்கிலிருந்து அல்லது இ-வாலட்டிலிருந்து எடுக்கப்பட்டுவிடுகிறது. ஆனால், 8.03 / 8.04-க்கு 'டிக்கெட் முன்பதிவு ஆகவில்லை' என்றோ 'REGRET' என்றோ வருகிறது. இதனால் பயணிகள் கடும் ஏமாற்றமடைகின்றனர்.
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது மட்டும்தான் இந்த மாதிரி டிக்கெட் கிடைக்காத, ரெக்ரட் பிரச்சினைகள் இருந்துகொண்டிருந்தன. இப்போது விழாக் கால முன்பதிவுகளுக்கும் இதே நிலை ஏற்பட்டுவிட்டது.
அப்படியென்றால் யார்தான் டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள்? டிக்கெட்டுகள் எல்லாம் எப்படி முன்பதிவு செய்யப்படுகின்றன? என்று பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
வருகிற அக். 23 ஆம் தேதிக்கு நேற்று முன்தினம் (ஆக. 24) டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சில நிமிடங்கள் ஐஆர்சிடிசி செயலி திறக்கவே இல்லை. பலருக்கும் ஐஆர்சிடிசி கணக்கை 'லாக் -இன்' செய்தவுடன் 'லாக் - அவுட்' ஆகிவிடுகிறது என்று புகார் அளிக்கின்றனர். ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியிலும் பிரச்னை உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுவதும் இந்த நிலைதான். பிகாரில் தேஜஸ் ராஜ்தானி உள்பட பல்வேறு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஒரு நிமிடத்திற்குள் அனைத்து டிக்கெட் பதிவுகளும் முடிந்து 'REGRET' என்று காட்டுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. சட்டவிரோத மென்பொருள் செயலிகள் மூலமாக டிக்கெட் முன்பதிவு முறைகேடு நடப்பதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில்தான் போலி ஐஆர்சிடிசி கணக்குகளை ஒழிக்க, சட்டவிரோத மென்பொருள் செயலி மூலமாக டிக்கெட் முன்பதிவுகளைத் தடுக்க, 'ஆதார் சரிபார்ப்பு கட்டாயம், குறிப்பிட்ட நேரங்களில் ஏஜெண்டுகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது' என்றல்லாம் விதிமுறைகள் கொண்டுவரப்பட்டு அமலிலும் உள்ளன. போலி கணக்குகள் பலவற்றை நீக்கியதாகவும் ரயில்வே அமைச்சகம் கூறி வருகிறது.
எனினும், தீபாவளி டிக்கெட் முன்பதிவு இந்தியா முழுவதும் உள்ள ரயில் பயணிகளுக்கு கடும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் இதனை உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ரயில் டிக்கெட் முன்பதிவு எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இந்த பிரச்னை வந்திருக்கலாம் என்று கூறும் ரயில்வே அதிகாரிகள், டிக்கெட் முன்பதிவு தொடங்கியவுடன் 'REGRET'என வந்தது இதுவே முதல்முறை, சட்டவிரோத டிக்கெட் முன்பதிவு சாஃப்ட்வேர் செயலிகள் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே குறிப்பிட்ட பண்டிகை நாள்களில் இந்த நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் பலரும் திட்டமிட்ட நாள்களில் பயணிக்க முடிவதில்லை என்று ஆதங்கப்படுகின்றனர்.
பண்டிகை நாள்களில் ஆயிரக்கணக்கில் சிறப்பு ரயில்களை இயக்குகிறோம் என்று மத்திய ரயில்வே துறை பெருமையாக சொல்லிக்கொள்கிறது. அறிவிப்பும் வருகிறது. ஆனால் சிறப்பு ரயில்கள் ஒவ்வொரு நாளும் தனித்தனியே அறிவிக்கப்படுகின்றன. அவற்றுக்கான முன்பதிவு எப்போது தொடங்குகிறது என்று பலருக்கும் தெரிவது இல்லை. அவை மற்ற விரைவு ரயில்களை போல சரியான நேரத்திற்கும் செல்வதில்லை, பயண நேரம் அதிகமாக இருக்கிறது என பல புகார்கள் இருக்கின்றன.
ரயில் போக்குவரத்து இப்போது ஏஜெண்டுகளுக்கும் 'மேல்நிலை' மக்களுக்குமாக மாறிவிட்டது என்று நெட்டிசன்களும் சாதாரண மக்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். ரயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்துமா? பிரச்னைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமா?