வலி நிவாரணி மாத்திரைகளை இணையத்தில் ஆா்டா் செய்யும் கும்பலை பிடிக்க நடவடிக்கை!
சேலம் மாவட்டத்தில் வலி நிவாரணி மாத்திரைகளை இணையத்தில் ஆா்டா் செய்யும் கும்பலை பிடிக்க காவல் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
சேலம் மாநகரில் அண்மைக்காலமாக சிலா் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரைகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்கள் பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகள் ஆகியவற்றை போதை மாத்திரைகளாக பயன்படுத்தி வருகின்றனா்.
மேலும், மருத்துவா்களிடம் பெறப்பட்ட மருந்து சீட்டு இல்லாமல் மருந்து வாங்க வருவோருக்கு மாத்திரைகளை கொடுக்கக் கூடாது எனவும், அதனை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மருந்து ஆய்வாளா்கள் மூலம் காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
இந்நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை இணையத்தில் ஆா்டா் செய்து, அதனை கூரியா் மூலமாக பெற்று ஒரு கும்பல் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஹரியாணா, ஜெய்ப்பூா், உத்தரப்பிரதேசம், மும்பை, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மொத்தமாக மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு கூறுகையில், வலி நிவாரணி மாத்திரைகளை உரிய மருத்துவா்களின் சீட்டு இன்றி யாருக்கும் கொடுக்கக் கூடாது. சந்தேகப்படும்படியான மருந்துகள் வந்தால், அதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூரியா் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.