வளாக நேர்காணல்களின் பின்னணியில் இருப்பது என்ன? பொறியியல் பட்டதாரிகள் கவனிக்க!
வளாக நேர்காணல்களின்போது, மிகப்பெரிய ஊதியத்தில் பணி வாய்ப்பை வழங்கும் நிறுவனங்களின் பின்னணியில் இருக்கும் தகவல்கள்.
பொறியியல் பட்டம் பெற்றுவிட்டு வேலைவாய்ப்பில்லாமல் இருந்தால், மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர மாட்டார்கள் என்று கருதி, வளாக நேர்காணல்களை நடத்தி, மாணவர்களை ஈர்த்தன பொறியியல் கல்லூரிகள்.
ஆனால் தற்போது வளாக நேர்காணல்கள் இருக்கும் கல்லூரிகளைத் தேர்வு செய்துதான் மாணவர்கள் சேருகிறார்கள். இதனை வைத்து சில நிறுவனங்களும் இதனை தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
என்ஐடியில் படித்த மாணவருக்கு, ஒரு நிறுவனத்தில் ரூ.43 லட்சம் ஆண்டு வருமானத்துக்குக் கிடைத்த வேலையிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது நண்பர் ஒருவர், என்ஐடியில் படித்து, பெங்களூரில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் ரூ.43 லட்சம் ஆண்டு வருவாயில் வேலை கிடைத்தது. ஆனால், அவர் கடந்த மாதம் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். வெறும் மூன்று மாத ஊதியத்தைக் கொடுத்து நிறுவனம் அவரை வெளியேற்றியிருக்கிறது என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு, தைரோகேர் நிறுவனர் டாக்டர் ஏ. வேலுமணி தன்னுடைய பதிலைப் பதிவிட்டு, இளைஞர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில், பொறியியல் முடித்துவிட்டு அதுவும் மிகப்பெரிய நிறுவனங்களில் பொறியியல் பட்டம் பெற்றுவிட்டு நல்ல ஊதியத்தில் வேலைக்கு சேர வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும் தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது, கல்லூரிகளுக்கு வந்து மாணவர்களை வளாகத் தேர்வில், தங்களது நிறுவனங்களுக்கு பணிக்குத் தேர்வு செய்யும்போது, சில நிறுவனங்கள் வழங்கும் அதிகப்படியான ஊதியத்துக்குப் பின்னால் சில நோக்கங்கள் மறைந்திருக்கின்றன.
அவர்களது முதன்மையான நோக்கம், நிறுவனத்தின் அடுத்த 3 அல்லது ஐந்து ஆண்டு கால செலவினத் தொகையை அதிகரித்துக் காட்டுவதற்கானதுதான். ஊழியர்களின் நலனுக்காக, நிறுவனம் செலவிடும் தொகையை அதிகரிப்பதற்கு மாறாக, இப்படியான வளாகத் தேர்வுகள் மூலம் அதிகப்படியான வருவாயைக் காட்டி, தங்கள் நிறுவனத்தின் செலவினக் கணக்கை அதிகரிப்பதுதான் நோக்கம்.
அதுபோன்ற நேரத்தில்தான், பணிக்கு அமர்த்தப்படும் ஊழியர்கள் சில மாதங்களில் பணியிலிருந்து நீக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு நிறுவனம் எந்த உதவியும் செய்தில்லை.
மேலும், புதிதாக பணியில் சேர்ந்தவர்கள் ஏதேனும் ஹோம் லோன் போன்றவற்றை வாங்கிவிட்டால், பிறகு அவர்களது நிலைமை மோசமாகி விடுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள், தனிநபர்களின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திடும். எனவே மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதையும் அவர் பதிவிட்டு இளைஞர்களை எச்சரித்துள்ளார்.