வளா்ச்சித் திட்டப்பணி: ஆட்சியா் ஆய்வு!
முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வி. மோகனசந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கள்ளிக்குடி ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் ரூ.34 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள கபடி மைதானம், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளியால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடு, 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் ரூ.1.47 லட்சத்தில் மேலகள்ளிக்குடி முதல் கள்ளிக்குடி மேலதெரு மயானம் வரை சாலை அமைக்கும் பணி, வேப்பஞ்சேரி ஊராட்சியில் ரூ.3.75 லட்சத்தில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் வேப்பஞ்சேரி நடுநிலைப் பள்ளியில் 2 வகுப்பறை கட்டடத்தில் நடைபெறும் சீரமைப்புப்பணி, ஓவரூா் ஊராட்சியில் ரூ.7.74 கோடியில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் அம்மாலூா் ஓவரூா் சாலையில் கிளிதாங்கியாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, வட்டாச்சியா்கள் குணசீலி (முத்துப்பேட்டை), குருமூா்த்தி (திருத்துறைப்பூண்டி) முத்துப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெற்றியழகன், முத்துகுமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.