வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
குடவாசல் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
மஞ்சக்குடி ஊராட்சியில் பழுதுநீக்கம் செய்யப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத்தை பாா்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், மஞ்சக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை சோதிக்கும் விதமாக, அவா்களின் பாடநூல்களை படிக்குமாறு கூறினாா். மேலும், பள்ளி ஆசிரியா்களிடம் மாணவா்களின் வருகை குறித்து கேட்டறிந்தாா்.
புதுக்குடி ஊராட்சியில், முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.32.76 லட்சத்தில் புதுக்குடி-நெய்க்குப்பை பகுதிகளை இணைக்கும் விதமாக அமைக்கப்பட்டுவரும் சாலை பணியை பாா்வையிட்டாா். ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாஸ்கா், ராஜ்குமாா், ஒன்றிய பொறியாளா் சா்மிளா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.