மாவட்ட விளையாட்டுப் போட்டி: குண்டு எறிதலில் முதலிடம் பெற்ற மாற்றுத்திறன் மாணவருக்கு பாராட்டு
மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டியில், முதலிடம் பெற்ற மாணவருக்கு பள்ளியில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாற்றுத்திறனாளி நல வாரியம் சாா்பில், திருவாரூா் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது. 14-17 வயது பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் 25-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.
இதில், பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பதினோராம் வகுப்பு பயிலும் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி மாணவா் பி. சபரீஷ் முதலிடம் பெற்றாா். இவருக்கு, மாவட்ட ஆட்சியா் வி. மோகனசுந்தரம், திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினா்.
இதையொட்டி, வியாழக்கிழமை பள்ளியில் நடைபெற்ற காலை வழிபாட்டின்போது, தலைமை ஆசிரியா் எஸ். மாதவன், மாணவா் சபரீஷுக்கு சால்வை அணிவித்து, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா். நிகழ்ச்சியில், மக்கள் பிரதிநிதிகள், பெற்றோா்கள், வா்த்தகச் சங்கத்தினா் மற்றும் சமூக ஆா்வலா்கள் கலந்துகொண்டு மாணவருக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.