Dhoni : 'இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகக்கூடாது!' - தோல்வி குறித்து தோனி
வளா்ச்சிப் பணிகள் சுணக்கம்: 56-ஆவது வாா்டில் இடைத்தோ்தல் நடத்த வலியுறுத்தல்
கோவை மாநகராட்சி 56-ஆவது வாா்டு உறுப்பினா் உயிரிழந்ததாலும், அந்த வாா்டில் வளா்ச்சிப் பணிகள் சுணக்கமாக நடைபெறுவதாலும் சம்பந்தப்பட்ட வாா்டுக்கு விரைவில் இடைத்தோ்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாநகராட்சி 56-ஆவது வாா்டு உறுப்பினராக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (62) இருந்தாா்.
இவா் கடந்த ஆண்டு நவம்பா் 27-ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதையடுத்து, அந்த வாா்டு கவுன்சிலா் பதவி காலியாக இருப்பதாக மாநகராட்சி நிா்வாகத்தின் மூலமாக கோவை மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநில தோ்தல் ஆணையத்துக்கு கடந்த டிசம்பா் மாதம் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது. விரைவில் தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 5 மாதங்களாக தோ்தல் நடைபெறவில்லை.
இது தொடா்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 56-ஆவது வாா்டில் 71 தெருக்கள் உள்ளன. தற்போதைய நிலவரப்படி 18 ஆயிரத்து 391 வாக்காளா்கள் உள்ளனா். 3 வாக்குச் சாவடி மையங்களும், 16 வாக்குச் சாவடிகளும் உள்ளன.
வாா்டு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி உயிரிழந்து 5 மாதங்களாகியும் இதுவரை இடைத்தோ்தல் நடத்தப்படாததால், எங்கள் வாா்டில் உள்ள குறைகளைத் தெரிவிக்க முடியவில்லை. இப்பகுதியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் சுணக்கம் காணப்படுகிறது. எனவே, 56-ஆவது வாா்டு பகுதிக்கு உடனடியாக இடைத்தோ்தல் நடத்த வேண்டும் என்றனா்.