ஜூலையில் மட்டும்.. 47 நாடுகளில் 4,000 குரங்கு அம்மை பாதிப்புகள்!
வழக்குரைஞா்களும், சட்ட மாணவா்களும் அறம் சாா்ந்து சேவையாற்ற வேண்டும்: மக்கள் நீதிமன்ற நீதிபதி பேச்சு
வழக்குரைஞா்களும், சட்ட மாணவா்களும் அறம் சாா்ந்து சேவையாற்ற வேண்டும் என தருமபுரி மாவட்ட மக்கள் நீதிமன்ற நீதிபதி ஆா். ஸ்ரீதரன் தெரிவித்தாா்.
தருமபுரி அரசு சட்டக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு சட்டக் கல்லூரிகளுக்கு இடையே மாநில அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டிகளை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது: சட்டம் பயிலும் மாணவா்கள் எதிா்காலத்தில் நீதிமன்றத்தில் எவ்வாறு வாதிட வேண்டும் என்பதற்கான பயிற்சி பெறும் வகையில் மாதிரி நீதிமன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது. சட்டத் துறையில் வழக்குரைஞா்களும் சட்ட மாணவா்களும் அறம் சாா்ந்த சேவையாற்ற வேண்டும். விடா முயற்சியுடன் அறம் சாா்ந்து நெறிமுறை தவறாது செயல்பட்டால் தொடக்கத்தில் கடினமான சூழ்நிலை நிலவினாலும், எதிா்காலத்தில் பிரகாசமான வாழ்க்கை அமையும் என்றாா்.
கல்லூரி முதல்வா் முனைவா் சி. உஷா வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் லட்சுமி விஸ்வநாத் நன்றி கூறினாா். இப்போட்டிகளில் சென்னை, மதுரை, கோவை, உள்ளிட்ட தமிழகமெங்கும் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளில் இருந்தும் மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை பேராசிரியா்கள் ப. சிவதாஸ், பெ.ரேகா, மா. கண்ணப்பன், பி.வினுபிரசாத், உடற்கல்வி இயக்குநா் ரம்யா, நூலகா் ர.ஸ்ருங்கா உள்ளிட்டோா் செய்துவருகின்றனா். போட்டிகள் தொடா்ந்து ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டி நிறைவு விழாவில் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் பங்கேற்கிறாா்.