பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டை விட, மக்கள் தங்கம், ரியல் எஸ்டேட்டை நம்புவது ஏன...
வழக்குரைஞா் ஆணையரை நியமிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி மனு: அறப்போா் இயக்கம் பதிலளிக்க உத்தரவு
மானநஷ்ட ஈடு கோரி தொடரப்பட்ட வழக்கில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் சாட்சியத்தைப் பதிவு செய்ய வழக்குரைஞா் ஆணையரை நியமிக்க கோரிய மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக அறப்போா் இயக்கம் பதிலளிக்க உத்தரவிட்டது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சியில், கோவை, தஞ்சாவூா், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நெடுஞ்சாலை பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீட்டில் சுமாா் ரூ.692 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறப்போா் இயக்கம் சாா்பில் தலைமைச் செயலரிடம் புகாா் அளிக்கப்பட்டது. அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி வசம்தான் நெடுஞ்சாலைத் துறை இருந்தது என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அறப்போா் இயக்கம் இந்தப் புகாா் மனுவை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டது. இதையடுத்து, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, அறப்போா் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேஷ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் ஜாகீா் உசேன் ஆகியோா் ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் எஸ்.ஆா்.ராஜகோபால், இந்த வழக்கில் மனுதாரரின் சாட்சியத்தைப் பதிவு செய்ய வழக்குரைஞா் ஆணையரை நியமிக்க வேண்டும். மனுதாரா் முன்னாள் முதல்வா் என்பதால், நேரில் வந்து சாட்சியம் அளிக்க முடியாது என கோரிக்கை விடுத்தாா். மேலும் இதுதொடா்பாக மனுவும் தாக்கல் செய்தாா்.
மனுதாரா் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்குரைஞா் ஆணையரை நியமிப்பது குறித்து அறப்போா் இயக்கம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆக.25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.