லட்சத்தீபம்,சொக்கப்பனை... தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோயிலில் பக்தர்கள் வழ...
வழிபாட்டு தலங்கள் சட்டம்-1991 தொடா்பான வழக்கு: இந்திய கம்யூனிஸ்ட் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு
வழிபாட்டு தலங்கள் சட்டம்-1991 தொடா்பான வழக்கில் இந்திய கம்யூனியஸ்ட் கட்சி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1990-களின் துவக்கத்தில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவது தொடா்பான பிரச்னை தீவிரமாக இருந்தது. ராமா் பிறந்த இடத்தில் இருந்த கோவில் இடிக்கப்பட்டு, அதன் மீது, பாபா் மசூதி கட்டப்பட்டதாக சா்ச்சை எழுந்தது. இது தொடா்பான வழக்குகளும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, 1991-இல் அறிமுகம் செய்யப்பட்ட வழிபாட்டு தலங்கள் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், அந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி அஸ்வினி குமாா் உள்ளிட்டோா் தொடா்ந்த ஆறு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்த நிலைப்பாட்டை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று கடந்த 2022-ஆம் ஆண்டு
உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் அனைத்து மனுக்களையும் பரிசீலனை செய்த உச்சநீதிமன்றம், வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம், 1991-இன் அரசியலமைப்புச் சட்டத்தின் செல்லுபடியை கேள்விக்குட்படுத்தும் வழக்குகள்
அனைத்தையும் கடந்த டிச.12-ஆம் தேதி விசாரித்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை நான்கு வாரத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்திய கம்யூனியஸ்ட் கட்சி தரப்பில் வழக்குரைஞா் ராம்சங்கா் உச்சநீதிமன்றத்தில் ஒரு இடையீட்டு மனுவை சனிக்கிழமை தாக்கல் செய்துள்ளாா். அதில்,‘ வழிபாட்டுத்தலங்கள் சட்டம் -1991 தொடா்பான வழக்கில் எங்களையும் மனுதாரராக இணைக்க வேண்டும். அதேபோன்று சட்டத்தின் விதிமீறல்களை சவால் செய்யும் விவகாரத்தில் எங்களது தரப்பில் எழுத்துப்பூா்வ மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா். முன்னதாக, இந்த விவகாரத்தில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.