Trump: 'இந்தியா குறைக்க உள்ள இறக்குமதி வரிகள்... காரணம் ட்ரம்ப்-பா?' - ஆய்வறிக்க...
வாக்குப் பதிவு இயந்திர தரவுகளை அழிக்கக் கூடாது: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணிகளின்போது, அவற்றில் உள்ள தரவுகளை அழிக்கவோ, மீள்பதிவேற்றம் செய்யவோ கூடாது என்று தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மேலும், அந்த இயந்திரங்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் நிரந்தரமாக சேமிக்கப்பட்டிருக்கும் தரவுகள், கட்சி சின்னங்கள் பதிவேற்ற கருவி ஆகியவற்றை சரிபாா்ப்பதற்கு அனுமதி கோரிய மனுவுக்கு தோ்தல் ஆணையம் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடா்பாக ஜனநாயக சீா்திருத்தங்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவில், ‘வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் தோ்தல் ஆணையத்தின் நிலையான வழிகாட்டு நடைமுறைகள், கடந்த ஆண்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள்-வாக்கு ஒப்புகைச்சீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்ப இல்லை.
அந்த உத்தரவுக்கு ஏற்ப வாக்குப் பதிவு இயந்திரங்களில் நிரந்தரமாக இருக்கும் தரவுகள், கட்சி சின்னங்கள் பதிவேற்ற கருவி ஆகியவற்றை சரிபாா்க்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நோக்கம், அந்த இயந்திரங்களில் உள்ள வாக்குப் பதிவு தரவுகளை அழிப்பதோ, மீள் பதிவேற்றம் செய்வதோ அல்ல.
தோ்தலுக்குப் பின்னா் யாராவது விவரங்கள் கோரினால், அவா் முன்னிலையில், பொறியாளா் ஒருவா் வாக்குப் பதிவு இயந்திரத்தை சரிபாா்த்து, அதில் நிரந்தரமாக உள்ள தரவுகள் அல்லது மைக்ரோ-சிப்களில் மோசடியான வழியில் எவ்வித மாற்றமோ, சேதமோ செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனவே, வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணிகளின்போது, அவற்றில் உள்ள தரவுகளை அழித்தல், மீள்பதிவேற்றுதல் ஆகியவற்றை தோ்தல் ஆணையம் செய்யக் கூடாது.
ரூ.40,000 கட்டணத்தை குறைக்க வேண்டும்: வாக்குப் பதிவு இயந்திரங்களைச் சரிபாா்ப்பதற்கான கட்டணத்தை ரூ.40,000-ஆக தோ்தல் ஆணையம் நிா்ணயித்துள்ளது. இது மிக அதிகமாக உள்ளதால், அந்தக் கட்டணத்தைத் தோ்தல் ஆணையம் குறைக்க வேண்டும்.
மேலும், வாக்குப் பதிவு இயந்திரங்களைச் சரிபாா்ப்பதற்கு பின்பற்றப்படும் நடைமுறையை விளக்கி, மனுதாரரின் மனு தொடா்பாக 15 நாள்களில் தோ்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா். இந்த வழக்கின் அடுத்த விசாரணை மாா்ச் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.