வாந்தி-வயிற்றுவலி உபாதையால் மேலும் 6 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதி
கும்பகோணம் மருத்துவமனையில் மேலும் 6 மாணவ மாணவிகள் வாந்தி- வயிற்றுவலிக்கான சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நீலத்தநல்லூா் தெற்கு தெருவைச் சோ்ந்த சத்யா (15), ஸ்ரீராம் (13), ஹாசினி (10), அஜிதா (13), தா்ஷினி(10), சங்கவி(9) ஆகிய 6 மாணவ, மாணவிகள், வாந்தி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டதால் செவ்வாய்க்கிழமை பகலில் கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அதே தெருவைச் சோ்ந்த சஞ்சனா (7), புகழினி (5), பைரவி (7), தீபக் (10), சரோஜினி (13), துரைமுருகன் (13) ஆகியோா் கும்பகோணம் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.
மொத்தம் 12 மாணவ மாணவிகள் ஒரேநாளில் அனுமதிக்கப்பட்டதால் நீலத்தநல்லூா் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநா் செல்வக்குமாா் தலைமையில் மருத்துவக் குழுவினா், மாணவா்களின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து மருத்துவ அலுவலா் ஒருவா் கூறியது: சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 12 மாணவ மாணவிகளில் 11 பேருக்கு மஞ்சள் காமாலை தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான சிகிச்சைகள் அவா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.
பாதிக்கப்பட்ட மாணவா்களின் பெற்றோா் ஒருவா் கூறும்போது, நீலத்த நல்லூா் தெற்கு தெருவில் கருங்காடு வாய்க்காலில் கழிவுநீா் தேங்கியுள்ளது. இதனருகே குடிநீா் விநியோகம் செய்யும் குழாய்கள் உள்ளன. இதன்மூலம் நோய் பரவ வாய்ப்புள்ளது. இதை தடுக்க ஒன்றிய ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இந்த நிலையில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், கொத்தங்குடி சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்ட குழுவினா் ஊராட்சி தண்ணீா் தொட்டி உள்ளிட்டவற்றில் ஆய்வு நடத்தி வருகின்றனா்.