jyotika: ``எடை குறைப்புதான் எதிர்காலத்துக்கான சாவி" - Weight Loss பயணம் குறித்து...
வால்பாறையில் ரூ.9 கோடியில் வணிக வளாக கட்டுமானப் பணியை கைவிட வியாபாரிகள் கோரிக்கை
வால்பாறை புதுமாா்க்கெட் பகுதியில் நகராட்சி சாா்பில் ரூ.9 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய வணிக வளாக கட்டுமானப் பணியை கைவிட வலியுறுத்தி வியாபாரிகள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனா்.
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள நகராட்சி வணிக கட்டடங்களை இடித்து புதிய கட்டடம் கட்ட அண்மையில் சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, வால்பாறை புதுமாா்க்கெட் பகுதியில் ரூ.9 கோடி செலவில் வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இப்பணிக்காக சில தினங்களுக்கு முன்பு மண் பரிசோதனையை அதிகாரிகள் மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, வால்பாறை அதிமுக தொழிற்சங்கத் தலைவா் வால்பாறை அமீது, நகரச் செயலாளா் மயில்கணேசன், வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவா் ஜெபராஜ் உள்ளிட்டோா் தலைமையில் நகராட்சி அலுவலகம் சென்ற புதுமாா்கெட் வியாபாரிகள் நகராட்சி ஆணையா் ரகுராமனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
அதில் தற்போது உள்ள சூழலில் புதிய வணிக வளாகம் கட்டி முடிக்கும் வரை மாற்று இடம் வழங்கினால் அங்கு வியாபாரம் செய்ய இயலாது. அதுமட்டுமல்லாமல் புதிய வணிக வளாகத்தில் கடைகளுக்கு கூடுதல் வாடகை விதிப்பதுடன், மீண்டும் தங்களுக்கு கடைகள் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே வால்பாறையில் புதிய வணிக வளாகம் கட்டுவதை கைவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.