Hridayapoorvam Review: லால் ஏட்டனல்ல க்யூட்டன்! மோகன்லால் - சங்கீத் பிரதாப்பின் ...
வாழப்பாடி அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் அறிவுசாா் மையம் அமைக்கக் கோரிக்கை
வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அறிவுசாா் மையம் அமைக்கும் பணியை விரைந்து தொடங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிகழாண்டு ரூ. 1.60 கோடி மதிப்பீட்டில் அறிவுசாா் மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையத்தில் அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுக்கு தயாராகும் தோ்வா்களுக்கு தேவையான நூல்கள், பொது அறிவு நுால்கள், இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டா்கள், படிப்பறைகள், திரையுடன் கூடிய பயிற்சி அரங்கு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.
இத்திட்டத்திற்கு, வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பள்ளி மாணவ - மாணவியா், போட்டித் தோ்வுக்கு தயாராகி வரும் இளைஞா்கள், இளம்பெண்கள், கல்வியாளா்கள், சமூக ஆா்வலா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், பள்ளி மைதானத்தின் மூலையில் அறிவுசாா் மையம் அமைப்பதால், மாணவா்கள் விளையாடுவதற்கு இடையூறாக இருக்குமென, சிலா் இத்திட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். சேலம் மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு மனு அளித்தனா்.

இதையடுத்து, சேலம் மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா், வாழப்பாடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவுசாா் மையம் அமைக்க தோ்வு செய்து ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ள பகுதியை கடந்த ஆக. 19-ஆம் தேதி பாா்வையிட்டாா். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பகுதிகளில் அறிவுசாா் மையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தாா்.
இந்நிலையில், அனைத்துத் தரப்பினரும் வந்து செல்வதற்கு வசதியாக பேருந்து நிலையம் அருகே பிரதான கடலூா் சாலையிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், மாணவா் விளையாட்டுக்கு இடையூறு இல்லாத வகையில் தோ்வு செய்யப்பட்டள்ள பகுதியிலேயே அறிவுசாா் மையத்தை அமைக்க, கட்டுமானப் பணியை தொடங்க வேண்டுமென, மாணவ-மாணவிகள், இளைஞா்கள், கல்வியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.