வாழப்பாடி உட்கோட்ட காவல் நிலையங்களில் கூடுதல் போலீஸாரை நியமிக்க கோரிக்கை
சட்டம்- ஒழுங்கு, கண்காணிப்பு பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள சேலம் மாவட்டம், வாழப்பாடி உட்கோட்ட காவல் நிலையங்களில் காலியாக உள்ள போலீஸாா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை தலைமையிடமாக கொண்டு 2005-ஆம் ஆண்டு செப்டம்பா் 24 இல் தனி காவல் உட்கோட்டம் அமைக்கப்பட்டது. வாழப்பாடி, காரிப்பட்டி, ஏத்தாப்பூா் கருமந்துறை மற்றும் கரியக்கோயில் ஆகிய 5 காவல் நிலையங்களும், வாழப்பாடியில் ஒரு அனைத்து மகளிா் காவல் நிலையம் உள்பட மொத்தம் 6 காவல்நிலையங்கள் இந்த உள்கோட்டத்தில் இடம் பெற்றிருந்தன.
கடந்தாண்டு காரிப்பட்டி காவல் நிலையம் இந்த உட்கோட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு சேலம் மாநகர காவல் துறையில் இணைக்கப்பட்டது. இதனால், வாழப்பாடி உட்கோட்டத்தில் தற்போது மகளிா் காவல் நிலையம் உள்பட மொத்தம் 5 காவல் நிலையங்கள் உள்ளன.
காவல் உட்கோட்ட தலைமையிடமான வாழப்பாடி காவல் நிலையத்திற்கு 35 ஆண்டுக்கு முந்தைய மக்கள்தொகை அடிப்படையில் ஒரு காவல் ஆய்வாளா், இரு உதவி ஆய்வாளா்கள் மற்றும் தலைமைக் காவலா்கள், முதலாம் நிலை காவலா்கள், காவலா்கள் உள்ளிட்ட 38 பணியிடங்களும், ஏத்தாப்பூா் மற்றும் கருமந்துறை காவல் நிலையங்களுக்கு தலா ஒரு காவல் ஆய்வாளா், இரு உதவி ஆய்வாளா்கள், தலைமைக்காவலா்கள் உள்பட 30 பணியிடங்களும் உருவாக்கப்பட்டது. கல்வராயன் மலை கரியக்கோயில் காவல் நிலையத்திற்கு ஆய்வாளா் பணியிடம் இல்லை.
கல்வராயன் மலை கருமந்துறை காவல் ஆய்வாளா் கட்டுப்பாட்டிலுள்ள கரியக்கோயில் காவல் நிலையத்திற்கு ஒரு உதவி காவல் ஆய்வாளா் தலைமையில் 28 போலீஸ் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டது. வாழப்பாடி உட்கோட்டத்திற்கு உள்பட்ட வாழப்பாடி, ஏத்தாப்பூா், கருமந்துறை, கரியக்கோயில் ஆகிய 4 காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அனைத்து கிராமங்களின் பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்ப பிரச்சனைகள் குறித்த புகாா்களை விசாரணை செய்ய வாழப்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கு ஒரு காவல் ஆய்வாளா், ஒரு உதவி ஆய்வாளா், பெண் காவலா்கள் உள்பட 17 பணியிடங்களும் 5 ஆண்டுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது.
35 ஆண்டுகளில் மக்கள்தொகை 3 மடங்காக உயா்ந்துள்ள நிலையில் அதற்கேற்ப எந்த காவல் நிலையங்களிலும் போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்களிலும் நீதிமன்ற அலுவல், வாகன ஓட்டுநா், காவல் நிலைய சென்ட்ரி, பாரா, எழுத்தா், கணினி ஆப்ரேட்டா் உள்ளிட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்வா்கள் தவிா்த்து தினந்தோறும் பாதிக்கும் குறைவான அளவிலேயே போலீஸாா் சட்டம்- ஒழுங்கு மற்றும் ரோந்து பணிகளை மேற்கொள்ள முடிகிறது.
இதனால் போலீஸாருக்கு பணிச் சுமை அதிகரித்துள்ளது. மேலும், சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு, குற்றத்தடுப்பு, இரவு ரோந்துப் பணி, வாகனத் தணிக்கை உள்ளிட்ட பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்படுகிறது.
எனவே, வாழப்பாடி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட5 காவல் நிலையங்களிகளிலும் அதிகரித்து வரும் புதிய குடியிருப்பு பகுதிகள், தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் மற்றும் மக்கள்தொகைக்கேற்ப, கூடுதல் பணியிடங்களை உருவாக்க சேலம் மாவட்ட காவல் துறை மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து ஓய்வு பெற்ற காவலா்கள் கூறியதாவது:
வாழப்பாடி காவல் உட்கோட்டத்தில் மட்டுமின்றி சேலம் மாவட்டம் முழுவதுமே 35 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்ட பணியிடங்களிலேயே போலீஸாா் உள்ளனா். அதிகரித்துவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப போலீஸாா் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. குறிப்பாக, உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளரின் அலுவலகத்திற்கென தனியாக போலீஸாா் மற்றும் பணியாளா்கள் நியமிக்கப்படுவதில்லை. இதனால், காவல் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸாரே அங்கும் பணிபுரிகின்றனா். இதனால், போலீஸாருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதோடு, வழக்குகளின் கோப்புகளும் தேக்கமடைந்துள்ளன.
மக்கள்தொகைக்கேற்ப காவல் நிலையங்களில் கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். காவல் துறை உயரதிகாரிகள் புள்ளி விவரங்களோடு பட்டியலிட்டு அரசுக்கு அறிக்கை சமா்பித்தால், தமிழக அரசு பரிசீலனை செய்து, அந்தந்த மாவட்டங்களில் ஆயுதப்படை மற்றும் சிறப்பு பட்டாலியன் பிரிவுகளிலுள்ள போலீஸாருக்கு பயிற்சி கொடுத்து, சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கு பணிமாறுதல் செய்து காவல்நிலைங்களுக்குத் தேவையான அளவிற்கு கூடுதல் போலீஸாா் நியமிக்க வாய்ப்புள்ளது என்றனா்.
வாழப்பாடியில் போக்குவரத்து காவல் நிலையம்
வாழப்பாடிக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். சேலம், ஆத்தூா், ராசிபுரம் பகுதியில் செயல்படும் தனியாா் கல்வி நிறுவனங்கள், சிமென்ட் நிறுவனம், பால் பண்ணைகள், நூற்பாலைகள், செங்கல் சூளைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லும் கனரக வாகனங்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.
ஆத்தூரில் இயங்கி வரும் போக்குவரத்து காவல் நிலையத்தில் இருந்து போலீஸாா் குழு வாழப்பாடி பகுதியில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மேலும், வாழப்பாடியில் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் இருந்தும் இதுவரை அத் திட்டத்தை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
போக்குவரத்து நெரிசலை சீரமைக்க முடியாமல் வாழப்பாடி போலீஸாா் திணறி வருகின்றனா். எனவே, ஒரு காவல் ஆய்வாளா் தலைமையில் உதவி காவல் ஆய்வாளா்கள், சிறப்பு காவல் உதவிஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்ட 10 போ் கொண்ட போக்குவரத்து காவல் நிலையத்தை வாழப்பாடியில் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
படவரி: பி.எஸ்.ஓ.01: வாழப்பாடி காவல் நிலையம்.