சேலம் உணவகத்தில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் பொருள்கள் சேதம்
சேலத்தில் உணவகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
சேலம் நான்கு சாலைப் பகுதியில் பிரபல நிறுவனத்தின் பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் திங்கள்கிழமை நள்ளிரவு வரை பிரியாணி விற்பனை நடந்துள்ளது. பின்னா் கடையை மூடிவிட்டு ஊழியா்கள் சென்றுள்ளனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமாா் 3 மணி அளவில் உணவகத்தில் இருந்த இரண்டு எரிவாயு உருளைகள் பயங்கர சப்தத்துடன் வெடித்ததாகக் கூறப்படுகிறது. சப்தம் கேட்டு வெளியே வந்த அப்பகுதி மக்கள், கடை தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
மேலும் பள்ளப்பட்டி காவல் நிலையம் மற்றும் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் மற்றும் போலீஸாா், கடையின் ஷட்டரை உடைத்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனா். ஆனால், தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை. எனினும், போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனா். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து பள்ளப்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.