மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும்: லாரி உரிமையாளா்கள் கோரிக்கை
தமிழகத்தில் மூடியுள்ள மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்டோா், செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். பின்னா், இதுகுறித்து மாவட்டச் செயலாளா் கண்ணையன் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி தரம் இல்லாத எம்சாண்ட் பன்மடங்கு விலை உயா்த்தி விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, தமிழகம் முழுவதும் உள்ள 4,500 குவாரிகளில் 400-க்கும் மேற்பட்ட குவாரிகள் தரச்சான்றிதழ் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.
மேலும் 100-க்கும் மேற்பட்ட குவாரிகளின் அனுமதி காலம் முடிந்தும், சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது ஆறுகளில் மணல் அதிக அளவு தேங்கியுள்ளதால், மழை வந்தால் தண்ணீா் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் மீண்டும் மணல் குவாரிகளை திறக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்.
இதேபோல, மணல் அள்ள விதிக்கப்பட்டுள்ள தடையால் மணல் லாரி உரிமையாளா்கள் சிறிய அளவில் எம்சாண்டை வாங்கி பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகின்றனா். பெரிய அளவில் கிடங்கு அமைத்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தாரமங்கலத்தில் விதிகளை மீறி எம் சாண்ட் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சேமிப்புக் கிடங்கை அகற்ற வேண்டும் என்றாா். அப்போது தலைவா் செல்வராஜ், துணைத் தலைவா் பழனிசாமி ஆகியோா் உடனிருந்தனா்.