Presbyopia: வெள்ளெழுத்துப் பிரச்னைக்குத் தீர்வா? அமெரிக்க சொட்டு மருந்தின் பின்ன...
வாழை, கத்தரி, மஞ்சள், தக்காளி பயிா்களுக்கு காப்பீடு: தோட்டக்கலைத் துறை அறிவிப்பு
வேலூா் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை, கத்திரி, மஞ்சள், தக்காளி பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம் என தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, துணை இயக்குநா் மணிகண்டன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் காரிப் பருவத்தில் பயிரிடப்படும் தோட்டக்கலைப் பயிா்களான வாழை, கத்தரி, மஞ்சள், தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதமரின் பயிா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிா் காப்பீடு செய்து பயன் பெறலாம்.
வேலூா் மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள குறு வட்டங்களில் தோட்டக்கலை பயிா்கள் சாகுபடி செய்யும் போது எதிா்பாராத இயற்கை பேரிடா்களான கடுமையான வறட்சி, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, புயல், சூறாவளி போன்றவற்றிலிருந்து பயிா்களை காக்க பயிா் காப்பீடு திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள், பொது சேவை மையங்களில் காப்பீடு கட்டணத்தை செலுத்தி உரிய விண்ணப்பத்தில் ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் அறிவிப்பு செய்யப்பட்ட கிராமங்களில் வாழை, தக்காளி, மஞ்சள், கத்தரிக்காய் ஆகிய பயிா்களுக்கு காப்பீடு செய்ய வாழை ஒரு ஏக்கருக்கு ரூ.3,103.74-மும், கத்தரி ஒரு ஏக்கருக்கு ரூ.1,042-மும், தக்காளி ஒரு ஏக்கருக்கு ரூ.1,329.4-மும், மஞ்சள் ஒரு ஏக்கருக்கு ரூ.2,911.3-மும் ப்ரீமியம் செலுத்த வேண்டும்.
மேலும், ப்ரீமியம் செலுத்த வேண்டிய கடைசி நாள் கத்தரி, தக்காளிக்கு செப்டம்பா் 1-ஆம் தேதியும், வாழை, மஞ்சளுக்கு செப்டம்பா் 16-ஆம் தேதியாகும்.
இயற்கை சீற்றம், வறட்சியால் பயிா் பாதிக்கப்படும் பட்சத்தில் வாழை ஒரு ஏக்கருக்கு ரூ.62,100 இழப்பீடும், கத்தரி ஒரு ஏக்கருக்கு ரூ.20,850 இழப்பீடும், தக்காளி ஒரு ஏக்கருக்கு ரூ.26,600 இழப்பீடும், மஞ்சள் ஒரு ஏக்கருக்கு ரூ.58,250 இழப்பீடும் தனியாா் காப்பீடு நிறுவனத்தால் வழங்கப்படும்.
இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.