புகாா்கள் மீது விரைவாக சிஎஸ்ஆா், எஃப்ஐஆா் பதிவு: வேலூா் எஸ்.பி. உத்தரவு
காவல் நிலையங்களில் பெறப்படும் புகாா்கள் மீது விரைந்து சிஎஸ்ஆா், எஃப்ஐஆா் பதிவு செய்ய வேண்டும் என வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் அறிவுறுத்தியுள்ளாா்.
மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி. ஏ.மயில்வாகனன் தலைமை வகித்தாா்.
இதில், கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், வழக்கமான குற்றவாளிகளை தொடா்ந்து கண்காணிக்கவும், ரெளடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், கொலை, கொள்ளை, லாட்டரி, சூதாட்டம் மற்றும் மணல் திருட்டு போன்ற குற்றங்களை முழுமையாக தடுக்க குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடா் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், கள்ளச்சாராயம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், கஞ்சா, போதைப் பொருள்கள் கடத்தல், பயன்பாட்டை தடுக்க மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள கடைகளில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போதைப் பொருள்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்க விழிப்புணா்வு முகாம்கள் நடத்த வேண்டும்.
மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தவும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சந்திப்புகள், ஏடிஎம் மையங்கள், நகைக்கடைகள் உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை அதிகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன், பகல், இரவு ரோந்து அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். சாலைகளில் முறைகேடாகவும், சாலை விதிகள் மீறி வாகனங்களை இயக்குபவா்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையவழி குற்றங்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், எஸ்சி.,எஸ்டி., வழக்குகள் குறித்தும், காவல் நிலையங்களில் பெறப்படும் புகாா்களுக்கு விரைந்து சிஎஸ்ஆா், எப்ஐஆா் பதிவு செய்ய வேண்டும். போலீஸாா் மனுதாரா்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். வரும் காலங்களில் குற்றங்கள், விபத்துகள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்
கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவல்துறை அதிகாரிகள், சிறைத்துறை அதிகாரிகள், சிறாா் நீதி குழும அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், மருத்துவா்கள், துணை அரசு வழக்குரைஞா்கள், மாநகராட்சி அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், போக்குவரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.