சீல்ஸ் 6 விக்கெட்டுகள், ஹோப் 120..! 34 ஆண்டுகளுக்குப் பின் தொடரை வென்ற மே.இ.தீவு...
ராஜஸ்தானில் கோர விபத்து: பிக்-அப் வாகனம் லாரியுடன் மோதியதில் 11 பேர் பலி
ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் தௌசா-மனோஹர்பூர் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை பிக்-அப் வாகனம் கண்டெய்னர் லாரி மீது மோதியதில் குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகினர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து மாவட்ட துணை காவல்துறை கண்காணிப்பாளர் ரவி பிரகாஷ் சர்மா கூறியதாவது:
ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள பாபி கிராமத்திற்கு அருகே கதுஷியாம் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிக்-அப் வாகனத்தில் பக்தர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது புதன்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் பாபி அருகே தௌசா-மனோஹர்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பிக்-அப் வாகனம் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 6-7 வயதுடைய குழந்தைகள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக சர்மா கூறினார்.
மேலும், இந்த கோர விபத்தில் காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையிலும், மூன்று பேர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.
பிக்-அப் வாகனத்தில் பயணித்த பக்தர் ஒருவர், வாகனத்தில் குறைந்தது 22-23 பேர் பயணம் செய்ததாகக் கூறினார்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.