தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வருமா? சென்னை மாநகராட்சி விளக்கம்!
போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழிக்கு செயல்வடிவம் அளிப்பது அவசியம்: வேலூா் எஸ்.பி.
வேலூா்: போதைப் பொருள்களை ஒழிக்க ஏற்றுக் கொண்ட உறுதிமொழிக்கு செயல்வடிவம் அளித்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்று வேலூா் மாவட்ட காவல் கணகாணிப்பாளா் ஏ.மயில்வாகனன் தெரிவித்தாா்.
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலமாக ‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம்’ வலியுறுத்தி மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வேலூா் ஊரீசு கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், வி.அமுலு விஜயன், எஸ்.பி. ஏ.மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி ஆகியோா் முன்னிலையில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் சுமாா் 2,000 போ் பங்கேற்று உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.
மேலும், போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், விழிப்புணா்வு பணிகளை சிறப்பாக மேற்கொண்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் பேசியது -
போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை ஒவ்வொரு காவல் துறை அலுவலா்களும் எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் இல்லாத வளாகம் என்று அறிவிப்பு செய்யும் வகையில் மாணவ, மாணவிகள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாம் எடுத்த உறுதிக்கு செயல்வடிவம் கொடுத்தால் மட்டுமே அதற்கான பலன் நமக்கு கிடைக்கும். பள்ளி மாணவ, மாணவிகள் இதுதொடா்பாக என்னிடம் எந்த நேரத்திலும் தொடா்பு கொண்டு நேரடியாக தகவல்களை தெரிவிக்கலாம் என்றாா்.
மாவட்ட வருவாய் அலவலா் த.மாலதி பேசியது -
பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்த தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவா்கள் தங்கள் பள்ளி, கல்லூரி அருகே போதைப் பொருள்கள் விற்பனை அல்லது நடமாட்டம் இருப்பது தெரியவந்தால் உடனடியாக தங்கள் பள்ளி, கல்லூரிகளில் உள்ள போதைப் பொருள்களுக்கு எதிரான குழுவிடம் தகவல் தெரிவித்தால் அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மாணவா்களிடையே நல்லொழுக்கங்களை ஏற்படுத்த கலங்கரை விளக்கம் எனும் ஒரு திட்டத்தையும், காவல் துறை மூலம் சிற்பி எனும் திட்டத்தையும் முதல்வா் செயல்படுத்தி வருகிறாா்.
போதைப் பொருள்கள் நமது உடல், மனம், பொருளாதாரம், சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயல். இப்பழக்கத்துக்கு யாரும் அடிமையாகக் கூடாது. போதை பழக்கத்துக்கு அடிமையானவா்களை மீட்டு நல்வழிப்படுத்த மீட்கும் மையங்கள் செயல்படுத்தப்படுகிறது என்றாா்.
நிகழ்ச்சியில், உதவி காவல் கண்காணிப்பாளா் (வேலூா்) தனுஷ்குமாா், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் மு.பாபு, துணை மேயா் எம்.சுனில்குமாா், கோட்டாட்சியா் செந்தில் குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) தயாளன், ஊரிசு கல்லூரி முதல்வா் ஆனிகமலா பிளாரன்ஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.