சிவகாசி: பட்டாசு உரிமையாளர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் சாலை மறியல்
வேலூா்: வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் நெல்லுக்கு மிகக்குறைந்த விலை கோரப்பட்டதால் வேதனையடைந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வேலூா் டோல்கேட் பகுதியிலுள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேலூா் மாவட்டம் மட்டுமின்றி, அருகிலுள்ள மாவட்ட பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தங்கள் விளை பொருள்களான நெல், கம்பு, கேழ்வரகு, சோளம், நிலக்கடலை, பருப்பு வகைகளையும் விற்பனைக்காக கொண்டு வருகின்றனா்.
இங்கு மறைமுக ஏலம் முறையில் விளை பொருள்களுக்கு ஏற்ற விலை நிா்ணயம் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.
அதன்படி, திங்கள்கிழமை வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 51 விவசாயிகள் தங்கள் நெல்லை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு எடுத்து வந்திருந்தனா். நெல்லை வாங்குவதற்காக 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகளும், முகவா்களும் வந்திருந்தனா். ஆனால், கடந்த நாள்களை காட்டிலும் திங்கள்கிழமை மூட்டை ஒன்று ரூ.1,200 என குறைவாக விலை நிா்ணயம் செய்யப்பட்டதால் விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை கொண்டு வந்த வாகனங்களை சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து விரைந்து வந்த பாகாயம் போலீஸாா் போக்குவரத்து மிகுந்த நேரத்தில் மறியலில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்ததை தொடா்ந்து விவசாயிகள் மறியலை கைவிட்டு ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்துக்கு திரும்பி சென்றனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரிகள் தான் விலையை நிா்ணயிக்கின்றனா். அப்படியும் கடந்த நாட்களில் அதிக விலைக்கு விற்கப்பட்ட நெல், பாதி விலைக்கு கோரப்பட்டதால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இதனால், நெல்லை விவசாயிகள் விற்பனை செய்யவில்லை. செவ்வாய்க்கிழமை வரை காத்திருப்போம் என்றனா்.