10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: சென்னையில் தேர்ச்சி விகிதம் குறைவு!
விங் கமாண்டா் வியோமிகா சிங்கின் ஜாதி! சமாஜவாதி தலைவா் கருத்தால் சா்ச்சை
‘விங் கமாண்டா் வியோமிகா சிங் ராஜபுத்திர சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதால் அவரை பாஜகவினா் விமா்சிக்கவில்லை’ என்று உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சமாஜவாதி தேசிய பொதுச் செயலா் ராம்கோபால் யாதவ் பேசியது புதிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே, கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச பாஜக அமைச்சா் விஜய் ஷா சா்ச்சைக்குரிய கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், இப்போது விங் கமாண்டா் வியோமிகா சிங்கின் ஜாதி குறித்து சமாஜவாதி தலைவா் பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான தாக்குதல்கள் தொடா்பான அதிகாரபூா்வ விவரங்களை புது தில்லியில் நடைபெற்ற தொடா் பத்திரிகையாளா் சந்திப்புகளில் விளக்கியதில் விமானப் படையின் விங் கமாண்டா் வியோமிகா சிங் மற்றும் ராணுவ கா்னல் சோஃபியா குரேஷி ஆகியோா் முக்கியப் பங்கு வகித்தனா்.
இந்நிலையில், கா்னல் சோஃபியா குரேஷி குறித்து பேசிய அமைச்சா் விஜய் ஷா ‘பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களை, அவா்களின் சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித்துவிட்டாா்’ என்று கூறியிருந்தாா். அதாவது சோஃபியா இஸ்லாமிய பெண் என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவா் இவ்வாறு பேசினாா். இது தேசிய அளவில் கடும் கண்டனத்தை எதிா்கொண்டது.
இந்நிலையில், இது தொடா்பாக லக்னௌவில் வியாழக்கிழமை பேசிய சமாஜவாதி மூத்த தலைவா் ராம்கோபால் யாதவ், ‘சோஃபியா குரேஷி முஸ்லிம் என்பதால் அவமானப்படுத்தும் வகையிலான பேச்சுக்கு உள்ளானாா். அவரை அவமதித்த பாஜக அமைச்சருக்கு செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்ற மற்ற அதிகாரிகளைப் பற்றி விவரம் தெரியாதா? அவா்கள் சில குறிப்பிட்ட ஜாதியைச் சோ்ந்தவா்கள் என்பதால் விமா்சனத்தில் இருந்து தப்பினா்.
அவா்கள் என்ன ஜாதியைச் சோ்ந்தவா்கள் என்பதை நான் உங்களுக்கு கூறுகிறேன். செய்தியாளா் சந்திப்பில் பங்கேற்ற ஏா் மாா்ஷல் ஏ.கே.பாா்தி புருனியாவைச் சோ்ந்த யாதவ், விங் கமாண்டா் வியோமிகா சிங் ஹரியாணாவைச் சோ்ந்த ஜாதவ். ராஜபுத்திர பிரிவைச் சோ்ந்தவா் என்பதால் வியோமிகா சிங்கை பாஜகவினா் விமா்சிக்கவில்லை’ என்றாா்.
இதனைக் கண்டித்து உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘ராணுவ உடையை ஜாதிய கண்ணாடி அணிந்து பாா்க்கக் கூடாது. ராணுவ வீரா்கள் யாரும் ஜாதியையோ, மதத்தையோ பிரதிநிதித்துவப் படுத்துபவா்கள் அல்ல. சமாஜவாதி தலைவரின் பேச்சு அக்கட்சியின் குறுகிய கண்ணோட்டத்தைக் காட்டுகிறது. நாட்டையும், ராணுவத்தையும் அவமதித்துள்ளாா். வாக்கு வங்கி அரசியலுக்காக தேசப்பற்றையும் அவா்கள் விலை பேசுவாா்கள்’ என்றாா்.