`விஜய், சீமானுக்கு அழைப்பு’ - கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?
2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவும் - பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. ஆனால் ஆட்சி அதிகாரம் குறித்து இரு தரப்பினரிடையேயும் ஒரு வித சலசலப்பு இருந்துக்கொண்டேதான் இருக்கிறது.
அமித் ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்று பரப்புரையில் மீண்டும் மீண்டும் பதிவு செய்துக்கொண்டே இருக்கிறார்.

இந்நிலையில் தனியார் பத்திரிகை ஒன்றிற்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
அதில் கூட்டணி ஆட்சி தொடர்பாகப் பேசிய எடப்பாடி பழனிசாமி, " தொண்டர்களை உற்சாகப்படுத்தவே கூட்டணி ஆட்சி என பாஜக கூறி வருகிறது. ஒற்றைக் கட்சி ஆட்சியையே தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். ஆட்சியில் பங்கு என்பதை தமிழ்நாட்டு மக்கள் விரும்பியதில்லை" என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், " ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்பதை பாஜக தலைமைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கூறவில்லை. அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என திமுக கூட்டணி கட்சிகள் கூறி வருவதற்கு பதிலளிக்கவே அப்படி பேசினேன்" என்று கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர், " திமுகவை வீழ்த்துவதற்கு ஒத்தக் கருத்துடைய கட்சிகள் இணைவது அவசியம்" என்றிருக்கிறார். அவரிடம் இது விஜய்க்கு பொருந்துமா? என்று கேள்வி எழுப்பியதற்கு , "விஜய்யும் தி.மு.க. ஆட்சிக்கு எதிராகத்தான் போராடுகிறார். எனவே எல்லா கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது அவருடைய கட்சிக்கும் பொருந்தும்" என்று பதிலளித்திருக்கிறார்.
சீமானின் நாம் தமிழர் கட்சி குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு, " எங்களது பொதுவான கருத்து என்னவென்றால், இந்த கட்சி அந்தக் கட்சி என்றில்லை, தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நினைக்கும் யாராக இருந்தாலும் எங்கள் கூட்டணிக்கு வரலாம். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. உரிய நேரத்தில் கூட்டணி குறித்த தெளிவான பார்வை கிடைக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.